முகநூல் உதவியால் 12 வருடங்களுக்கு பின் குடும்பத்துடன் இணையும் சிறுமி


முகநூல் உதவியால் 12 வருடங்களுக்கு பின் குடும்பத்துடன் இணையும் சிறுமி
x
தினத்தந்தி 8 Dec 2019 9:00 AM IST (Updated: 8 Dec 2019 9:00 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திர பிரதேசத்தில் முகநூல் உதவியால் 12 வருடங்களுக்கு பின் குடும்பத்துடன் சிறுமி இணைகிறார்.

விஜயவாடா,

ஆந்திர பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் சீப்புருபள்ளி நகரில் தனது பெற்றோருடன் பவானி என்ற சிறுமி வசித்து வந்துள்ளார்.  இவர் தனது 4வது வயதில் பெற்றோரிடம் இருந்து பிரிந்து காணாமல் போய்விட்டார்.  அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அந்த சிறுமியை விஜயவாடாவில் உள்ள ஜெயா என்ற பெண் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார்.  வம்சி கிருஷ்ணா என்பவரிடம் வீட்டு வேலைக்காக பவானி சென்றுள்ளார்.

இதன்பின் நடந்தவற்றை பற்றி வம்சி கூறும்பொழுது, வீட்டு வேலைக்கு பணியமர்த்தும் நபரிடம் ஆவணங்களை வாங்கி சரிபார்ப்பது எனது வழக்கம்.  பவானியின் வயது விவரம் அறிய ஆவணங்கள் கேட்டேன்.

அதற்கு பவானி, பெற்றோரிடம் இருந்து காணாமல் போனபின் தன்னை ஒரு பெண் எடுத்து வளர்த்து வருகிறார்.  அதனால் தன்னிடம் ஆவணங்கள் என்று எதுவுமில்லை என கூறினார்.  பவானியிடம், உன்னுடைய உண்மையான பெற்றோரிடம் சேர உனக்கு விருப்பம் உண்டா? என கேட்டேன்.  அவள் ஆம் என்றாள்.

இதன்பின்பு பவானியிடம் விவரங்கள் பெற்று முகநூலில் தேடினேன்.  சிலருக்கு தகவல் அனுப்பினேன்.  எனது தகவலுக்கு ஒருவரிடம் இருந்து பதில் தகவல் வந்தது.  அவர் அளித்த விவரங்கள், பவானி அளித்த தகவலுடன் ஒத்து போயின.  அந்த நபர் வீடியோ காலில் வரும்படி கேட்டு கொண்டார்.  இதன்பின்னர் அந்த நபரும், அவரது குடும்பத்தினரும் சிறுமி தங்கள் குடும்ப உறுப்பினர் என உறுதி செய்தனர் என கூறியுள்ளார்.

இதனால் தனது குடும்பத்துடன் இணையும் மகிழ்ச்சியில் பவானி உள்ளார்.

எனினும், பவானியை வளர்த்த ஜெயா முதலில் வருத்தத்தில் இருந்துள்ளார்.  பின்னர், பவானியின் முடிவை வரவேற்றுள்ளார்.

Next Story