பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை; நடந்த பின் வரவும்: உன்னாவ் போலீசாரின் அலட்சியம்
பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை என்றும் நடந்த பின் வரவும் என்றும் உன்னாவ் போலீசார் அலட்சியம் காட்டியுள்ளனர் என பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேசத்தின் உன்னாவ் நகரில் கடந்த 11 மாதங்களில் 86 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன என செய்திகள் வெளியாகின.
சமீபத்தில், உத்தர பிரதேசத்தின் உன்னாவ் நகரில் பாலியல் பலாத்கார குற்றவாளிகள் உள்பட 5 பேரால் இளம்பெண் ஒருவர் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகி, தீ வைத்து எரிக்கப்பட்டார். அவர் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதற்கு உத்தர பிரதேச அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு அறிவித்து உள்ளது.
உத்தர பிரதேசத்தின் உன்னாவ் நகரில் இந்துப்பூர் கிராம பகுதியை சேர்ந்த அந்த இளம்பெண் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடத்தி செல்லப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த குற்ற செயலில் ஈடுபட்ட சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி ஆகிய 2 பேர் மீது கடந்த மார்ச் மாதம்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்காக, நேற்று முன்தினம் காலை, இளம்பெண் தனது வீட்டில் இருந்து கோர்ட்டுக்கு புறப்பட்டார்.
அவர் கோர்ட்டுக்கு செல்லும் வழியில், சிவம் திரிபாதி, சுபம் திரிபாதி உள்பட 5 பேர் வழிமறித்து, அப்பெண்ணை தீ வைத்து எரித்தனர். இதனைத்தொடர்ந்து பெண் மீது தீ வைத்த 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த முதல் மந்திரி ஆதித்யநாத், இந்த வழக்கு விரைவு விசாரணை நீதிமன்றத்திற்கு எடுத்து செல்லப்படும் என கூறினார்.
இந்நிலையில், இளம்பெண் தீ வைத்து எரிக்கப்பட்ட அதே இந்துப்பூர் கிராம பகுதியை சேர்ந்த மற்றொரு பெண் அதிர்ச்சி அளிக்கும் குற்றச்சாட்டை உன்னாவ் போலீசார் மீது கூறியுள்ளார்.
அவர், சில மாதங்களுக்கு முன் மருந்து வாங்க சென்ற தன்னை கிராமத்தில் உள்ள 3 பேர் தடுத்து, ஆடைகளை பிடித்து இழுத்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர் என கூறியுள்ளார். அவர்களை அடையாளமும் காட்டியுள்ளார்.
இதுபற்றி உன்னாவ் போலீசாரிடம் புகார் அளிக்க சென்ற அந்த பெண்ணை, பாலியல் வன்கொடுமை ஒன்றும் நடக்கவில்லை. நடந்த பின் வரவும் என்று போலீசார் கூறி துரத்தி விட்டனர் என குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
கடந்த 3 மாதங்களாக காவல் நிலையத்திற்கு சென்றும், தனது புகாரை அவர்கள் கேட்க கூட இல்லை என்றும் கூறியுள்ளார்.
இச்சம்பவத்திற்கு பின் 1090ஐ (மகளிர் உதவி எண்) தொடர்பு கொண்டால் 100ஐ தொடர்பு கொள்ள கூறினர். அவர்களை தொடர்பு கொண்டால் உன்னாவ் போலீசாரிடம் புகார் அளிக்கும்படி கூறுகின்றனர். குற்றவாளிகளான 3 பேரும் வீட்டுக்கு தினமும் வந்து, புகார் கொடுக்க கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
உன்னாவ் நகரில் இளம்பெண் பாலியல் பலாத்கார குற்றவாளிகளால் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டு அந்த அதிர்ச்சி மறைவதற்குள், அதே கிராமத்தில் வசிக்கும் மற்றொரு பெண் உன்னாவ் போலீசாரின் அலட்சியம் பற்றி கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.
Related Tags :
Next Story