மக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை தாக்கல் செய்ய 293 எம்பிக்கள் ஆதரவு
மக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை தாக்கல் செய்ய 293 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 82 பேர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
புதுடெல்லி
பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத பாகுபாட்டால் வெளியேறி இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்று பா.ஜனதா தனது நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, 1955-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, 2016-ம் ஆண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வந்தது.
இந்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. மக்களவை பதவிக்காலம் முடிவடைந்தவுடன், அந்த மசோதா காலாவதி ஆகிவிட்டது.
ஆகவே, புதிதாக குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படும் என்று மோடி அரசு அறிவித்தது. இதற்கு மத்திய மந்திரிசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, மக்களவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது . கேள்வி நேரத்துக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மசோதாவை தாக்கல் செய்து பேசினார்.
மசோதாவை அறிமுகம் செய்ய 293 பேர் ஆதரவும், 82 பேர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இன்று பிற்பகலில் மசோதா மீதான விவாதம் தொடங்க உள்ளது. லோக்சபாவின் அலுவல் பட்டியலில் இத்தகவல்கள் இடம் பெற்றுள்ளன. மசோதாவை இன்றே நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
Related Tags :
Next Story