கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள்: 3 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி; 9 தொகுதிகளில் முன்னிலை


கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள்:  3 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி; 9 தொகுதிகளில் முன்னிலை
x
தினத்தந்தி 9 Dec 2019 2:50 PM IST (Updated: 9 Dec 2019 2:50 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக இடைத்தேர்தலில் 3 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. 9 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள். இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது. அதே நேரத்தில் கூட்டணி அரசுக்கு எதிராக செயல்பட்டதாலும், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் கர்நாடக சட்டசபையில் 17 இடங்கள் காலியாக உள்ளன.

அந்த 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு கடந்த 5ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர், ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி ஆகிய 2 தொகுதிகளை தவிர்த்து மற்ற 15 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் போட்டியிட்டனர். சிவாஜிநகர் தொகுதியில் தமிழரான சரவணாவும், ராணி பென்னூர் தொகுதியில் அருண்குமாரும் பா.ஜனதா சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட்டு இருந்தனர்.

காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் 15 தொகுதிகளிலும், ஜனதாதளம்(எஸ்) கட்சி 12 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இடைத்தேர்தலை சந்தித்து இருந்தது. 15 தொகுதிகளுக்கு கடந்த 5ந்தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒட்டு மொத்தமாக 68 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. 

கர்நாடகத்தில் தற்போது முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜனதா கட்சிக்கு 105 எம்.எல்.ஏ.க்களும், ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ.வின் ஆதரவும் உள்ளது. இடைத்தேர்தலில் குறைந்தது 6 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நீடிக்கும்.

இந்நிலையில், இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கர்நாடக இடைத்தேர்தலில் நண்பகல் அளவில் வெளியான ஓட்டு எண்ணிக்கை முடிவில் 3 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.  9 இடங்களில் முன்னிலையில் உள்ளது.  இதேபோன்று காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளிலும், சுயேச்சை ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளனர்.

Next Story