நித்யானந்தா எங்கே? ஈக்வடார் நாட்டிற்கு எப்போது சென்றார்.. ஏன் வெளியேற்றப்பட்டார்...-தூதர் புதிய விளக்கம்


நித்யானந்தா எங்கே? ஈக்வடார் நாட்டிற்கு எப்போது சென்றார்.. ஏன் வெளியேற்றப்பட்டார்...-தூதர் புதிய விளக்கம்
x
தினத்தந்தி 11 Dec 2019 7:25 AM GMT (Updated: 11 Dec 2019 8:31 AM GMT)

நித்யானந்தா ஈக்வடார் நாட்டிற்கு எப்போது சென்றார்.. ஏன் வெளியேற்றப்பட்டார்.. என்பது குறித்து அந்நாட்டின் தூதர் புதிய விளக்கம் அளித்து உள்ளார்.

புதுடெல்லி

திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வருகிறார். இதன் கிளைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகின்றன.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி எல்லைகள் அற்ற, நாடுகள் அற்ற, விர்ச்சுவல் இந்து நாட்டைக் கட்டமைக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார் நித்யானந்தா.

ஆனால் எங்கள் நாட்டில் நித்யானந்தா இல்லை என்று இந்தியாவிற்கான ஈக்வடார் தூதரகம் கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி விளக்கம் அளித்து இருந்தது.

நித்யானந்தா ஈக்வடார் நாட்டிற்கு எப்போது வந்தார்... ஏன் வெளியேற்றப்பட்டார் என புதிய விளக்கத்தை அந்நாட்டின் தூதர் ஜெய்ம் மர்ச்சன் ரோமெரோ, கார்டியன் பத்திரிகைக்கு  புதிய விளக்கத்தை கொடுத்துள்ளார்... 

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

நித்யானந்தா கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி முதல் முதலாக ஈக்வடார் நாட்டிற்கு சுற்றுலா விசாவில் சென்றுள்ளார். ஈக்வடார் நாட்டில் உள்ள குயாக்கூல் என்ற துறைமுக நகருக்கு சென்ற அவர் அங்கேயே தங்கியுள்ளார் . அங்கிருந்து சர்வதேச பாதுகாப்பு கேட்டும், ஈக்வடார் நாட்டின் அகதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அந்நாட்டு அரசிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்துள்ளார்.

இதையடுத்து, ஈக்வடாரில் தற்காலிகமாக தங்குவதற்காக 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், சர்வதேச பாதுகாப்பு வேண்டியும், அகதியாக கருத வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் பரிசீலித்த ஈக்வடார் அரசு, நித்யானந்தாவுக்கு அனுமதி வழங்க மறுத்து விட்டது.

இந்நிலையில், ஈக்வடார் அரசு எனக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி, அந்நாட்டு உயர்நீதி மன்றத்திலும் முறையிட்டிருக்கிறார் நித்யானந்தா. இதனால், தங்கள் நாட்டில் தற்காலிகமாக தங்கியுள்ள நித்யானந்தாவை வெளியேற்ற முடிவு செய்தது ஈக்வடார் அரசு.

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு ஜூலை முதல் ஈக்வடாரில் தங்கியிருந்த நித்யானந்தா 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அங்கிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார். ஈக்வடாரில் இருந்து வெளியேறும் முன்பாக, நான் அடுத்து செல்லப்போகும் இடம் கரீபியன் கடல் அருகே உள்ள ஹைதி  தீவாக இருக்கும் என்று நித்யானந்தா சொல்லி சென்றதாக ஈக்வடார் தூதர் கூறியுள்ளார்.

பாஸ்போர்ட் முடக்கப்பட்ட நிலையில் 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு எங்கே இருக்கிறார் நித்யானந்தா என்று யாருக்கும் தெரியாத நிலையில், ஈக்வடார் நாட்டின் தூதர் ஜெய்ம் மர்ச்சன் ரோமெரோ, கார்டியன் இதழுக்கு கொடுத்துள்ள விளக்கத்தின் அடிப்படையில் கடந்த ஓராண்டாக நித்யானந்தா தஞ்சம் கேட்டு அலைந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, நித்யானந்தாவின் கைலாசா இணையதளத்தின் ஐபி முகவரியின் அடிப்படையில், அவர் பனாமா கால்வாய்க்கும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கும் இடையே ஏதோ ஒரு தீவில் இருக்கலாம் என கூறப்படுகிறது.

நித்யானந்தா எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடித்து 12ம் தேதிக்குள் சொல்ல வேண்டும் என கர்நாடக ஐகோர்ட்  அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க இவ்வளவு தாமதம் ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Next Story