சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்தும் இந்த சட்டத்தை நிறைவேற்ற நினைப்பது மோசமான செயல் - ப.சிதம்பரம்
சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்தும் இந்த சட்டத்தை நிறைவேற்ற நினைப்பது மோசமான செயல் என்று மாநிலங்களவையில் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையில் பெரும்பான்மையில்லாத நிலையிலும் மற்ற கட்சிகள் ஆதரவுடன் நிறைவேற்ற முனைப்பு காட்டி வருகிறது. இந்த மசோதாவுக்கு காங், தேசியவாத காங், திரிணாமுல் காங்., திமுக, சிவசேனா, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேசியதாவது:-
குடியுரிமை மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்திருக்க கூடாது. குடியுரிமை மசோதா சட்ட நிபுணர்களின் ஆலோசனை பெறப்படாமல் உருவாக்கப்பட்டுள்ளது.
மசோதா குறித்து சட்ட அமைச்சகம், தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்டீர்களா? மதத்தின் பெயரால் துன்புறுத்தப்படுபவர்களுக்கு மட்டும் குடியுரிமை ஏன்?
இலங்கை, பூடான் நாடுகளை குடியுரிமை மசோதாவில் சேர்க்காதது ஏன்? என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்தும் இந்த சட்டத்தை நிறைவேற்ற நினைப்பது மோசமான செயல். எப்படி இஸ்லாமியர்களளையும் பிற மதத்தினரையும் அடையாளம் காண்பீர்கள். அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும்.
கிறிஸ்தவர்களை சேர்த்துவிட்டு இஸ்லாமியர்களை நீக்கியது ஏன்? இந்த கேள்விகளுக்கு பொறுப்பேற்று பதில் சொல்லப்போவது யார், நன்மை தீமைகளுக்கு பொறுப்பாளி யார்?
தலைமை வழக்கறிஞரை இந்த அவைக்கு அழைத்து அவரிடம் நாங்கள் கேள்வி கேட்க ஏற்பாடு செய்யுங்கள். சட்டரீதியான கருத்தை சட்ட அமைச்சகம், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கேட்க வேண்டும். இந்த மசோதாவுக்கு அட்டர்னி ஜெனரல் பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story