தலைவி, குயின் படங்களுக்குத் தடை கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட தலைவி, குயின் படங்களுக்குத் தடை கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கனா ரனாவத் நடிக்கும் "தலைவி" என்ற படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய்யும், ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் "குயின்" என்ற இணையதள தமிழ் தொடரை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனும் இயக்கி வருகின்றனர்.
தன் அனுமதியில்லாமல் தலைவி, ஜெயா, குயின் ஆகியவற்றை தயாரிக்கவும், விளம்பரப்படுத்தவும், திரையிடவும் தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகளான ஜெ.தீபா சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திரைப்படத்தையும், இணையதள தொடரையும் பார்க்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும். படத்தை பார்த்து ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க வேண்டும் என வாதிட்டார்.
இயக்குனர் விஜய் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், தலைவி திரைப்படம், தலைவி என்ற பெயரில் வெளியான புத்தகத்தை தழுவி எடுக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ள இந்த புத்தகத்துக்கு இதுவரை தடை ஏதும் கோரப்படவில்லை. தீபா ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. அவர் ஜெயலலிதாவின் குடும்பத்தை சேர்ந்தவரும் அல்ல என வாதிட்டார்.
இணையதள தொடர் தயாரிக்கும் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இந்த தொடர் தயாரிக்கப்படவில்லை. மாறாக குயின் என்ற புத்தகத்தை தழுவியே எடுக்கப்படுகிறது.
2018-ம் ஆண்டிலேயே இணையதள தொடர் தயாரிப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டு, 25 கோடி ரூபாய் செலவில் தொடரை தயாரித்துள்ள நிலையில், விளம்பரத்துக்காக கடைசி நேரத்தில் தீபா வழக்கு தொடர்ந்துள்ளார் எனச் சுட்டிக்காட்டினார்.
மேலும், தனது வாழ்நாள் முழுவதும் ஜெயலலிதாவுடன் இருந்ததாக மனுதாரர் கூறுவது பொய். ஆனால், 2002-ம் ஆண்டுக்கு பின் அவர் ஜெயலலிதாவுடன் இல்லை எனவும், 2016-ல் இறந்த பின் தான் வந்துள்ளார். அதனால் இந்த வழக்கை தாக்கல் செய்ய தீபாவுக்கு அடிப்படை உரிமை இல்லை எனவும், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தடை கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
Related Tags :
Next Story