உள்ளாட்சி தேர்தல் தீர்ப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. முறையீடு - நீதிபதிகள் தலையிட மறுப்பு


உள்ளாட்சி தேர்தல் தீர்ப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. முறையீடு - நீதிபதிகள் தலையிட மறுப்பு
x
தினத்தந்தி 13 Dec 2019 4:25 PM IST (Updated: 14 Dec 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தி.மு.க. முறையிட்டது. ஆனால் நீதிபதிகள் இதில் தலையிட மறுத்து விட்டனர்.

புதுடெல்லி,

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2-ந் தேதி பிறப்பித்த உத்தரவை தடை செய்யக் கோரி தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தன. அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 9 மாவட்டங்களில் 4 மாதங்களுக்கு பதிலாக 3 மாதங்களில் வார்டு மறுவரையறை உள்ளிட்ட பணிகளை முடித்து தேர்தல் நடத்த வேண்டும் என்றும், தற்போது நடைபெறும் தேர்தலை 2011-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நடத்த வேண்டும் என்றும் கடந்த 11-ந் தேதி தீர்ப்பு கூறியது.இதைத்தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையம் மீண்டும் ஒரு அறிவிக்கையை வெளியிட்டு, தேர்தல் அட்டவணையை வெளியிட்டது.

இந்தநிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வில் தி.மு.க. சார்பில் மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி ஆஜராகி, “கடந்த 11-ந் தேதி வழங்கிய தீர்ப்பில், 2011-ம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி தேர்தலை நடத்த வேண்டும் என்றும், தொகுதி மறுவரையறை, இட ஒதுக்கீடு குறித்து இந்த தேர்தலில் கணக்கில் கொள்ளத் தேவை இல்லை என்றும் கூறி இருக்கிறீர்கள். மேலும் குறிப்பிட்ட சில வார்த்தைகளின் நேரடியான பொருள் குறித்தும் விளக்கம் தேவைப்படுகிறது” என்று முறையிட்டார்.

அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி குறுக்கிட்டு, “முடிந்து போன ஒரு விஷயத்துக்காக இவர்கள் எத்தனை முறை கோர்ட்டை நாடுவார்கள்? இவர்களுடைய எந்த கோரிக்கையிலும் எந்த முகாந்திரமும் இல்லை” என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே கூறுகையில், “தி.மு.க. தற்போது முன்வைக்கும் கோரிக்கையை நிராகரிக்கிறோம். கோர்ட்டு மீண்டும் இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. மேலும் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு சட்டத்தின் அடிப்படையில் தெளிவாக இருக்கிறது. அதில் புதிதாக கூறுவதற்கு ஒன்றுமில்லை. முன்பு இந்த வழக்கு விசாரணையில் முகுல் ரோத்தகி, தி.மு.க.தான் உள்ளாட்சி தேர்தலை நிறுத்த முயற்சிக்கிறது என்று புகார் கூறியபோது நாங்கள் அதை நம்பவில்லை. ஆனால் இப்போது தி.மு.க.தான் தேர்தலை தடை செய்ய முயற்சிக்கிறது என்பது தெளிவாகி விட்டது” என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.நரசிம்மா வாதாடுகையில், உள்ளாட்சி தேர்தலை நிறுத்துமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்ததாக தி.மு.க. தரப்பில் பேட்டி கொடுத்ததாக கூறினார்.

இதைதத்தொடர்ந்து நீதிபதிகள், தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை எதுவும் இல்லை என்று கூறியதோடு, கடந்த 11-ந் தேதி வழங்கிய தீர்ப்பின்படி தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Next Story