ராகுல் காந்தியின் சர்ச்சை கருத்தால் நாடாளுமன்றத்தில் பா.ஜனதா பெண் எம்.பி.க்கள் கடும் அமளி - இரு சபைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு


ராகுல் காந்தியின் சர்ச்சை கருத்தால் நாடாளுமன்றத்தில் பா.ஜனதா பெண் எம்.பி.க்கள் கடும் அமளி - இரு சபைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 13 Dec 2019 5:11 PM IST (Updated: 14 Dec 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

ராகுல் காந்தியின் சர்ச்சை கருத்தால் நாடாளுமன்றத்தில் பா.ஜனதா பெண் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இரு சபைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர், “பிரதமர் மோடி இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) என முழங்குகிறார். ஆனால் இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்வோம் (ரேப் இன் இந்தியா) என்பதுதான் இன்றைய நிலையாக உள்ளது” என சாடினார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த பிரச்சினையால், குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் பாரதீய ஜனதா பெண் எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.

மக்களவை நேற்று கூடியதும், 2001-ம் ஆண்டு, டிசம்பர் 13-ந் தேதி நடந்த நாடாளுமன்ற தாக்குதலின்போது வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சு விவகாரம் எழுந்தது. பாரதீய ஜனதா எம்.பி.க்கள் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கி இருப்பதாகவும், அவர்களை பேச அனுமதிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை ராஜாங்க மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால் கூறினார்.

பாரதீய ஜனதா கட்சியின் பெண் எம்.பி.க்கள் ஒன்று சேர்ந்து ராகுல்காந்திக்கு எதிராக அமளியில் ஈடுபட்டனர். ஆண் எம்.பி.க்களும் அவர்களுடன் சேர்ந்து கோஷமிட்டனர். இதனால் சபையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது.

அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை தோற்கடித்த மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, அவருக்கு எதிராக ஆவேசமாக பேசினார். அப்போது அவர், “ராகுல் காந்தி, இந்தியாவின் ஆண்களையும், பெண்களையும் அவமதித்து உள்ளார். அவரது பேச்சு, இந்தியாவில் பெண்களை பலாத்காரம் செய்ய வாருங்கள் என்று அழைப்பு விடுப்பதுபோல அமைந்துள்ளது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் தண்டிக்கப்பட வேண்டும்” என ஆவேசமாக கூறினார்.

தனது அரசியல் எதிரிகளை கிண்டல் செய்வதற்காக ராகுல் காந்தி பாலியல் பலாத்கார வழக்குகளை குறிப்பிடுவதற்கு அவர் கடும் கண்டனமும் தெரிவித்தார்.

ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ராகுல் காந்தியை கடுமையாக கண்டித்து பேசினார். அவர், “ராகுல் காந்தி இந்த சபையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டையும் காயப்படுத்தி விட்டார்” என கூறினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “இறக்குமதி செய்து வரும் நாடான இந்தியாவை ஏற்றுமதி செய்கிற நாடாக மாற்றுவதற்குத்தான் மோடி அரசு மேக் இன் இந்தியா (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டத்தை கையில் எடுத்தது. நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது இந்த திட்டத்தின் நோக்கமாக அமைந்தது. ஆனால் அதை இப்போது ஓசை நயத்துக்காக கூற இயலாத கருத்துக்களுடன் பேசுகிறார்கள். இத்தகைய எம்.பி.க்களுக்கு இந்த சபையில் உறுப்பினராக இருப்பதற்கு தார்மீக உரிமை இல்லை” என சாடினார்.

ஒட்டுமொத்த நாட்டிடமும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

சபைக்கு வெளியே நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக பாரதீய ஜனதா எம்.பி.க்கள் ஆனந்த் ஹெக்டேயும், சாத்வி நிரஞ்சன் ஜோதியும் சபையில் வருத்தம் தெரிவித்த சம்பவத்தை அவர் நினைவு கூர்ந்தார். அப்போது அவர்கள் மந்திரிகளாக இருந்ததையும் குறிப்பிட்டார். (தற்போதும் நிரஞ்சன் ஜோதி மந்திரியாக உள்ளார்).

தி.மு.க. எம்.பி. கனிமொழியும், தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலேயும் தங்கள் கருத்துக்களை கூறுமாறு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கேட்டுக்கொண்டார்.

கனிமொழி பேசியபோது, அவர் ராகுல் காந்தியை பாதுகாக்கும் வகையில் கருத்து வெளியிட்டார். அவர், “ ராகுல் காந்தி சபைக்குள் இந்த கருத்தை தெரிவிக்கவில்லை. அவர் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படுகிற பாலியல் தாக்குதல்களையும், வன்முறைகளையும்தான் குறிப்பிட்டார்” என்று கூறினார்.

இதற்கிடையே, காங்கிரஸ் எம்.பி.க்கள் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று, கேள்வி நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குரல் கொடுத்தனர்.

பாரதீய ஜனதா பெண் எம்.பி. லாக்கட் சாட்டர்ஜி, ராகுல் காந்தி நாட்டின் பெண்களை மட்டுமல்ல, ஒவ்வொருவரையும் அவமதித்துள்ளார். எல்லா ஆண்களும் பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் அல்ல என்று கூறினார்.

கடும் அமளியால் சபையை இடையில் ஒரு முறை ஒத்தி வைக்கும் நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து சபையில் அமளி நிலவியது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல் காந்தி பதில் அளிப்பதற்கு வாய்ப்பு தரப்படவேண்டும் என்று முழக்கமிட்டனர். அப்போது சபையில் பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் இருந்தனர்.

இறுதியில் சபையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.

மாநிலங்களவையிலும் ராகுல்காந்தி கருத்தால் புயல் வீசியது. வட கிழக்கு மாநிலங்களில் நடக்கிற போராட்டங்கள் பற்றிய பிரச்சினையை காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா எழுப்பி பேசி முடித்ததும் ராகுல் காந்தி விவகாரத்தை ஆளும் கட்சி எம்.பி.க்கள் எழுப்பி, அவரது கருத்து பெண்களின் கண்ணியத்துக்கு எதிராக அமைந்திருப்பதாக கூறி முழக்கமிட்டனர்.

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தினர்.

நியமன எம்.பி.யும், பரதநாட்டிய கலைஞருமான சோஹல் மான்சிங் ஒழுங்கு பிரச்சினை எழுப்பினார். ஆனால் சபை தலைவர் வெங்கையாநாயுடு, “கேள்விக்கு காரணமான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த சபையில் உறுப்பினராக இல்லை என்பதால் அவரது பெயரை இங்கே இழுக்கக்கூடாது” என கூறி நிராகரித்தார்.

வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்று வருகிற போராட்ட விவகாரம் மாநிலங்களவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இறுதியில் சபையை தேதி குறிப்பிடாமல் சபை தலைவர் வெங்கையா நாயுடு ஒத்திவைத்தார்.

Next Story