சொத்துக் குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராக ஜெகன் மோகன் ரெட்டிக்கு சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
சொத்துக் குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராக ஜெகன் மோகன் ரெட்டிக்கு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமராவதி,
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்-மந்திரியுமான ஜெகன் மோகன் ரெட்டி, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு, ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த சிபிஐ, 2012 ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்தது. 16 மாதங்களுக்கு பிறகு, ஜெகன் மோகன் ரெட்டி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் வழக்கில் தொடர்புடைய மற்றவர்களும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஐதராபாத் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். இந்நிலையில் ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி கடந்த ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றார். முதல்வருக்கான பணிகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சிபிஜ நீதிமன்றத்தில் ஜெகன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெகன் கோரிக்கைக்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, “குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் எந்தப் பதவியில் இருந்தாலும் சட்டத்துக்கு முன் அவர் சாதாரண மனிதர்தான். ஆதலால், ஜெகன்மோகன் வரும் 10-ம் தேதி இவ்வழக்கில் நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும்” என உத்தரவிட்டார்.
இதன் காரணமாக ஜெகன் மோகன் ரெட்டி முதல்-மந்திரியாக ஆன பிறகு முதல் முறையாக இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த உத்தரவுக்கு எதிராக ஜெகன் மோகன் ரெட்டி உயர்நீதிமன்றம் செல்ல வாய்ப்பு உள்ளது.
Related Tags :
Next Story