பாகிஸ்தானில் குருத்வாரா தாக்குதல் விவகாரம்: சோனியா காந்தி கண்டனம்
பாகிஸ்தானில் குருத்வாராவில் நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நன்கானா சாகிப் என்ற இடத்தில் பிறந்தாா். அவரது நினைவாக அங்கு குருத்வாரா கட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் லாகூர் அருகே உள்ள நன்கனா சாகிப்பில் சீக்கிய இளம்பெண் கடத்திச் செல்லப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு சீக்கியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத மாற்றத்தை எதிர்த்த சீக்கியர்களை கண்டித்து அங்குள்ள குருத்வாரா மீது இரு அமைப்புக்களைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
சீக்கியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது போன்ற மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்பதால் நன்கனா சாகிப் பகுதி சீக்கியர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். குருத்வாரா மற்றும் சீக்கியர்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் இடைக்காலத்தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
பாகிஸ்தானின் நன்கனா சாகிப் குருத்வாராவில் நடந்த தாக்குதல் சம்பவம் கண்டனத்திற்குரியது. தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுகுறித்து வழக்கு தொடர வேண்டும். பாகிஸ்தான் அரசை நிர்பந்தம் செய்து வழக்கு தொடர மத்திய அரசு நடவடிக்கை வேண்டும். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், பாகிஸ்தான் செல்லும் யாத்ரீகர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யவும், எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல்களைத் தடுக்க குருத்வாராவில் போதுமான பாதுகாப்பை உறுதி செய்யவும் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் இந்திய அரசு இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என மத்திய அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story