சிஏஏ விவகாரம்: பொய்யான தகவல்களை கூறி மக்களை வன்முறைக்கு தூண்டி விடுகின்றனர் - ராகுல்காந்தி, பிரியங்கா மீது அமித்ஷா குற்றச்சாட்டு


சிஏஏ விவகாரம்: பொய்யான தகவல்களை கூறி மக்களை வன்முறைக்கு தூண்டி விடுகின்றனர் - ராகுல்காந்தி, பிரியங்கா மீது  அமித்ஷா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 5 Jan 2020 3:41 PM IST (Updated: 5 Jan 2020 3:41 PM IST)
t-max-icont-min-icon

சிஏஏ விவகாரத்தில் ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் பொய்யான தகவல்களை கூறி மக்களை வன்முறைக்கு தூண்டி விடுகின்றனர் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் பாஜக பூத் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தேசியத் தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித் ஷா, செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேசியதாவது:

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும், முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தில் மக்களை தவறாக வழிநடத்தி, கலவரத்தை தூண்டுகின்றனர். 

சிறுபான்மையினருக்கு நான் ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன். குடியுரிமை சட்டத்தால், உங்களின் குடியுரிமை பறிபோகாது.

அரவிந்த் கெஜ்ரிவால், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கண்களைத் திறந்து பாருங்கள். பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனித ஸ்தலமான நன்கானா சாகிப் கடந்த இரு நாட்களுக்கு முன் எவ்வாறு தாக்கப்பட்டது என்பதைப் பாருங்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் தொடர்ந்து எதிர்த்து வருபவர்களுக்கு அங்கு நடந்த சம்பவமே பதிலாகும்.  தவறான செய்திகளை எதிர்க்கட்சிகள் பரப்புகின்றன. ஓட்டு வங்கிக்காக இதனை காங்கிரஸ் செய்கிறது. குடியுரிமை திருத்தச்சட்டம், எந்த மதத்திற்கும் எதிரானது இல்லை. 

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தபோது, 15 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தது. இப்போதுவரை அந்த கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.  டெல்லிக்கு என்ன செய்தீர்கள் என்பதை கெஜ்ரிவாலிடம் மக்கள் கேட்க வேண்டும்.

டெல்லியில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக தேர்தலைச் சந்தித்து ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story