4-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகம்


4-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகம்
x
தினத்தந்தி 6 Jan 2020 5:15 AM IST (Updated: 6 Jan 2020 1:37 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 4-வது நாளாக ஏறுமுகம் கண்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.78.48, டீசல் ரூ.72.39 என விற்பனை ஆனது.

புதுடெல்லி, 

ஈரானுடன் அமெரிக்கா தொடர்ந்து விரோதப்போக்கை கடைப்பிடித்து வருகிறது. இந்த நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத் வந்திருந்த இடத்தில், ஈரான் படைத்தலைவர் காசிம் சுலைமானியை (வயது 62) அமெரிக்கா அதிரடியாக வான்தாக்குதல் நடத்தி கொன்றது உலக அரங்கை அதிர வைத்துள்ளது.

இதனால், அமெரிக்கா, ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் கொல்லப்பட்ட தினத்தில் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்தது.

இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. அது இந்தியாவிலும் பெருத்த தாக்கத்தை ஏற் படுத்தி வருகிறது.

தொடர்ந்து 4-வது நாளாக நேற்று பெட்ரோல், டீசல் இரண்டும் விலை உயர்வை சந்தித்தன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 காசுகள் அதிகரித்தது. டீசல் விலை லிட்டருக்கு 11 காசுகள் கூடி உள்ளது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78.48, டீசல் ரூ.72.39 என்ற அளவில் விற்பனை ஆனது.

இந்தியாவை பொறுத்தமட்டில் 84 சதவீத எரிபொருள் தேவைக்கு இறக்குமதியைத்தான் நம்பி உள்ளது. எனவே உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஒரு ஏற்றம் ஏற்படுகிறபோது, அது உடனடியாக இந்தியாவில், இந்திய பொருளாதாரத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

உள்நாட்டில் கிடைக்கிற கச்சா எண்ணெய் விலையும்கூட, சர்வதேச சந்தையில் நிலவு கிற விலைக்கு ஏற்பத்தான் விற்பனை செய்யப்படுகிறது.

நாட்டின் எரிபொருள் தேவையில் மூன்றில் இரு பங்குக்கு மத்திய கிழக்கு நாடுகளைத்தான் இந்தியா எதிர்பார்த்து உள்ளது. குறிப்பாக ஈராக், சவுதி அரேபியாவிடம் இருந்துதான் இந்தியா இறக்குமதி செய்கிறது.

போர் பதற்றமான சூழல் மத்திய கிழக்கு பகுதியில் நிலவினாலும்கூட, வினியோகம் பாதிக்காது என்று அதிகாரிகள் தரப்பினர் கூறுகிறார்கள். ஆனால் விலை ஏற்றம் இருக்கத்தான் செய்யும் என்றும் அவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதம் என்ற மோசமான அளவை எட்டி உள்ளது. இதில் இருந்து மீள்வதற்கு மத்திய அரசு கடுமையாக முயற்சித்தாலும், அதில் உரிய பலனை அடைய முடியாத சூழல் நிலவுகிறது.

ஏனென்றால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு பண வீக்கத்துக்கு வழி வகுக்கும். அது மட்டுமின்றி சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்துக்காக அரசு செலவு செய்கிற தொகையும் அதிகரிக்கும். இது அரசுக்கு கூடுதல் நிதி இழப்புக்கு வழிவகுக்கும்.

Next Story