ஈரான் - அமெரிக்கா போர் பதற்றம் ; இந்தியாவிற்கு ஏற்படும் பாதிப்பு


ஈரான் - அமெரிக்கா போர் பதற்றம் ; இந்தியாவிற்கு ஏற்படும் பாதிப்பு
x
தினத்தந்தி 6 Jan 2020 11:45 AM GMT (Updated: 6 Jan 2020 11:45 AM GMT)

ஈரான் - அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் இந்தியாவிற்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

புதுடெல்லி

ஈரான் நாட்டின் சிறப்பு ராணுவத் தளபதி காசிம் சுலைமானி, அமெரிக்க ராணுவ படைகளால் படுகொலை செய்யப்பட்டது காரணமாக  மத்திய கிழக்கு நாடுகளில்  போர் பதற்றம் அதிகரித்து விட்டது.

அணுசக்தி இயக்க நடவடிக்கைகளில் ஈரானுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை. அதேவேளை அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் அமெரிக்க படைகள் உள்பட மொத்தம் 5,200 வெளிநாட்டு படைகளை வெளியேற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

இந்த இரு அறிவிப்புகளால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் மேலும் தீவிரமடையும் என தெரிகிறது. இந்த அறிவிப்புகள் குறித்து அமெரிக்கா உடனடியாக எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.

உலகில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வதில் ஈரான் நாட்டிற்கு பெரும் பங்கு உள்ளது. அதிகளவில் எண்ணெய்  உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் ஈரான் தொடர்ந்து முதல் 3 இடங்களில் இருக்கிறது.

உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் நுகர்வோரான இந்தியா, அதன் கச்சா எண்ணெய் தேவைகளில் 80 சதவீதத்திற்கும் மேலானது மற்றும் அதன் இயற்கை எரிவாயு தேவைகளில் 40 சதவீதத்தை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்கிறது.

நாட்டின் உள்நாட்டு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி கடந்த சில ஆண்டுகளில் குறைந்து வருவதால், இந்தியா இன்னும் இறக்குமதியை சார்ந்தே உள்ளது.

2018-19 ஆம் ஆண்டில் இந்தியா 207.3 மில்லியன் டன் கச்சா எண்ணெயையும், 2019 காலாண்டில் ஏப்ரல்-நவம்பர் காலகட்டத்தில் ஒரு நாளைக்கு 4.5 மில்லியன் பீப்பாய்களையும் இறக்குமதி செய்தது. மேலும், நுகர்வு அடிப்படையில் இந்தியாவின் இறக்குமதி சார்பு 84.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் 83.3 சதவீதமாக இருந்தது.

2018-19 ஆம் ஆண்டில் நாடு எண்ணெய் இறக்குமதிக்காக 111.9 பில்லியன் டாலர் செலவழித்துள்ளது, இது முந்தைய நிதியாண்டில் 87.8 பில்லியன் டாலராக  இருந்தது என்று எண்ணெய் அமைச்சகத்தின் பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு செல் (பிபிஏசி) தெரிவித்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள ஈரான்- அமெரிக்கா போர் பதற்றத்தினால், கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள அடித்தட்டு மக்கள் வரை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இந்தியாவில் பெட்ரோல், டீசலின் விலை அதிகரிக்கும் பொழுது அத்தியாவசிய பொருள்களின் விலையும் அதிகரிக்க கூடும். இதனால் பண வீக்கம் அதிகரித்து இந்திய பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது .

மும்பை பங்குச்சந்தையில் எண்ணெய் நிறுவனப் பங்குகள் அனைத்தும் திடீரென விலை குறையத் தொடங்கின . நாட்டின் பங்குசந்தைகள் இன்று வீழ்ச்சியுடன் வர்த்தகமாகி வரும் நிலையில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 32 காசுகள் சரிந்து, 72 ரூபாய் 8 காசாக உள்ளது. 

தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உச்சம் அடைந்து உள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.512 உயர்ந்து ரூ.31,168-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிந்த நிலையில், 41 ஆயிரம் புள்ளிகளுடன் உள்ளது. 

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும்  சரிந்து, 12 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் வர்த்தகமாகி வருகிறது.

இந்தியா ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கடந்த இரண்டு காலாண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்து சதவீத வளர்ச்சியில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. பணவீக்கம் ஐந்து சதவீதத்தை விட அதிகமாக இருக்கிறது. வெங்காயம் மற்றும் பருப்பு  வகைகளின்  விலை உயர்ந்து வருகிறது. இந்த புதுப்பிரச்சினை இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும் சவாலாக இருக்க கூடும் என கருதப்படுகிறது.

Next Story