ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்கு; டெல்லி கவர்னருடன் அமித்ஷா பேச்சு
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யு.) அங்குள்ள ஆசிரியர் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் இரவு பல்கலைக்கழக வளாகத்தில் பொதுக்கூட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
அப்போது தங்கள் முகத்தை துணியால் மறைத்துக்கொண்டு ஹாக்கி மட்டைகள், இரும்பு கம்பிகள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்தது. அவர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் என கண்ணில் பட்ட அனைவரையும் பயங்கரமாக தாக்கினர்.
பல்கலைக்கழக மாணவர் சங்க நிர்வாகம் இடதுசாரி மாணவர்களிடம் இருக்கும் நிலையில், இந்த கொடூர மோதலின் பின்னணியில் பா.ஜனதாவின் மாணவரணியான ஏ.பி.வி.பி. இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். ஆனால் பா.ஜனதா மாணவரணியோ, இடதுசாரி மாணவர் இயக்கத்தை குற்றம் சாட்டி வருகிறது.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் தற்போது குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நேற்று பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் நிர்வாகத்துடன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர். இதில் துணை வேந்தர் ஜெகதீஷ் குமார் பங்கேற்கவில்லை.
இதைப்போல மாநில துணைநிலை கவர்னர் அனில் பைஜாலை தொடர்பு கொண்டு பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா, பல்கலைக்கழக வளாகத்தில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்துடன் விவாதிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் தாக்குதல் குறித்து விசாரணை நடத்துமாறு டெல்லி போலீஸ் தலைவர் அமுல்யா பட்நாயக்கிற்கும் உத்தரவிட்டார்.
இந்த வன்முறையை தூண்டி விட்டதே துணைவேந்தர்தான் என குற்றம் சாட்டியுள்ள மாணவர் சங்கங்கள், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உள்ளன.
இந்த தாக்குதலை தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் சபர்மதி விடுதி வார்டன்கள் இருவர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
பல்கலைக்கழக தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 34 பேரும் நேற்று வீடு திரும்பினர். செமஸ்டர் தேர்வுக்கான பதிவை புறக்கணிக்கும் மாணவர்களை பார்வையிட சென்றபோது, ‘போராட்டத்தில் ஈடுபடும் உங்களுக்கு பாடம் கற்பிக்கப்படும்’ என பேராசிரியர் ஒருவர் மிரட்டியதாகவும், அதைத்தொடர்ந்துதான் இந்த தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியதாகவும் மாணவர் சங்க தலைவர் கோஷ் குறிப்பிட்டார்.
தாக்குதல் சம்பவத்தால் பெரும் பீதியில் உறைந்திருக்கும் மாணவர்களிடையே அமைதியை நிலைநாட்டுவதற்காக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் டெல்லி போலீசார் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் ஜே.என்.யு., ஜாமியா மற்றும் டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பல்கலைக்கழகத்தில் தற்போது நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
அங்கு விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தங்கள் அறைகளை காலி செய்து வீடு திரும்பி வருகின்றனர். எனினும் மற்றொரு பிரிவினர், மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப்போல ஆக்ஸ்போர்டு, கொலம்பியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
Related Tags :
Next Story