மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ”கேட் வே ஆப் இந்தியா” வில் மாணவர்கள் விடிய விடிய போராட்டம்


மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ”கேட் வே ஆப் இந்தியா” வில் மாணவர்கள் விடிய விடிய போராட்டம்
x
தினத்தந்தி 7 Jan 2020 8:46 AM IST (Updated: 7 Jan 2020 9:04 AM IST)
t-max-icont-min-icon

ஜே.என்.யூ மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கேட்வே ஆப் இந்தியா’வில் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மும்பை,

டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் ஆசிரியர் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்து கொண்டு இருந்தது. அப்போது, அங்கு முகமூடி அணிந்து வந்த மா்ம ஆசாமிகள் இரும்பு கம்பி, கம்பு போன்றவற்றால் மாணவர்களை சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் பலர் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலை கண்டித்து நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே மும்பை ‘கேட்வே ஆப் இந்தியா’ பகுதியில் மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். விடிய, விடிய நடந்த இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவை தெரிவித்தனர்.

இந்த போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. இதில் மும்பையில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் ஏராளமான பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் இணைந்தனர். விடிய விடிய மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பாலிவுட் நட்சத்திரங்களான அனுராக் காஷ்யாப், ஸ்வரா பாஸ்கர் மற்றும் விஷால் தத்லானி ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். 

விடிய விடிய போராட்டம் நடந்து வரும் நிலையில், இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார், அங்கிருந்து அப்புறப்படுத்தினர். போராட்டக்காரர்கள் ஆசாத் மைதானத்திற்கு மாற்றப்படுவதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

கேட் வே ஆப் இந்தியா பகுதியில் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், சுற்றுலாப்பயணிகளுக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதால், போராட்டக்காரர்களை வெளியேறுமாறு கேட்டுக்கொண்டதாகவும் ஆனால், அவர்கள் மறுத்ததால், ஆசாத் மைதானத்திற்கு அவர்களை மாற்றுவதாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. 

Next Story