இன்று நாடுதழுவிய வேலைநிறுத்தம்: வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்


இன்று நாடுதழுவிய வேலைநிறுத்தம்: வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்
x
தினத்தந்தி 8 Jan 2020 5:00 AM IST (Updated: 8 Jan 2020 3:48 AM IST)
t-max-icont-min-icon

நாடுதழுவிய வேலை நிறுத்தத்தில் வங்கி பணியாளர்கள் சங்கமும் பங்கேற்பதால், வங்கி சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

புதுடெல்லி,

12 அம்ச பொது கோரிக்கைகளை வலியுறுத்தி, 10 மத்திய தொழிற்சங்கங்கள் இன்று (புதன்கிழமை) நாடுதழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. தொழிலாளர் துறை சீர்திருத்தங்கள், அன்னிய நேரடி முதலீடு, தனியார் மயமாக் கல் உள்ளிட்ட மத்திய அரசு கொள்கைகளை எதிர்த்து இந்த வேலைநிறுத்தம் நடக்கிறது.

வேலைநிறுத்தத்தில் 25 கோடிக்கு மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக 10 தொழிற்சங்கங்களின் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 2-ந் தேதி நடைபெற்ற கூட்டத்தின்போது, மத்திய தொழிலாளர் நல அமைச்சகம், தொழிலாளர்களின் எந்த கோரிக்கைக்கும் உத்தரவாதம் அளிக்கவில்லை. மத்திய அரசின் அணுகுமுறை, தொழிலாளர்களை அவமதிப்பது போல் இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்த வேலைநிறுத்தத்துக்கு பல்வேறு பொதுத் துறை வங்கி பணியாளர்கள் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட முக்கிய சங்கங் கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளன.

இதனால், நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. பணம் பட்டுவாடா, காசோலை பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இந்த பாதிப்பு குறித்து பங்குச்சந்தைகளுக்கு பெரும்பாலான வங்கிகள் ஏற்கனவே தகவல் தெரிவித்துள்ளன. அதே சமயத்தில், தனியார் வங்கிகள் எந்த பாதிப்பும் இல்லாமல் வழக்கம்போல் செயல்படும்.

இந்த வேலைநிறுத்த போராட் டம் தொடர்பாக மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் (தமிழ்நாடு) பொதுச்செயலாளர் எம்.துரைப்பாண்டியன் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:-

மத்திய-மாநில அரசு ஊழியர்கள், அரசு-தனியார் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், தனியார் துறைகளை சேர்ந்த ஊழியர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஆதரவாக பங்கேற்கிறார்கள்.

பா.ஜ.க. தவிர்த்து அனைத்து கட்சிகளும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பல இடங்களில் மறியல் போராட்டங்களும் நடைபெற உள்ளது. வருமான வரித்துறை அலுவலகம் முன்பு எனது தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொது வேலை நிறுத்தத்தையொட்டி சென்னை மாவட்டத்தில் இன்று காலை 9 மணிக்கு அண்ணாசாலை டேம்ஸ் ரோடு சந்திப்பில்(அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் அருகில்) மத்திய தொழிற்சங்கத்தலைவர்கள், பல்வேறு சம்மேளனங்களின் தலைவர் கள் கலந்துகொள்ளும் மறியல் போராட்டம் நடைபெறும்.

வேலை நிறுத்தத்துக்கும், மறியல் போராட்டத்துக்கும் பொது மக்கள் ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இன்று மதியம் 12 மணி முதல் 12.10 மணி வரை நான்கு சக்கர, இருசக்கர வாகனங்களில் சாலை களில் செல்பவர்கள் வாகனங் களை இயக்காமல் சாலையோரம் நிறுத்திவைத்து ஆதரவு தர கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story