பக்சார் சிறையில் தயாரிப்பு: நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு கயிறுகள் தயார்


பக்சார் சிறையில் தயாரிப்பு: நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு கயிறுகள் தயார்
x
தினத்தந்தி 10 Jan 2020 4:07 AM IST (Updated: 10 Jan 2020 4:07 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் துணை மருத்துவ மாணவி நிர்பயாவை கற்பழித்துக் கொன்ற 4 பேருக்கும் பீகார் மாநிலம் பக்சார் சிறையில் தயாரிக்கப்பட்ட தூக்குக் கயிறுகளின் மூலம் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

புதுடெல்லி, 

தூக்குக் கயிற்றை தயாரிக்கும் பணியை மேற்கொள்ளும் பக்சார் சிறை நிர்வாகத்துக்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது. பீகார் மாநிலம் பக்சாரில் 1880-ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியாளர்களால் பக்சார் சிறை தொடங்கப்பட்டுள்ளது. அப்போது கடும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் தூக்குத்தண்டனையே நிறைவேற்றப்படும். இதனால் 1884-ம் ஆண்டு தூக்குக் கயிற்றை தயாரிக்கும் எந்திரத்தை ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அந்த சிறைக்கு கொண்டு வந்தனர்.

சிறையில் உள்ள கைதிகளை கொண்டே தூக்குக் கயிற்றையும் தயாரித்து உள்ளனர். தூக்குக் கயிறானது பக்சார் சிறையில் தயாரிக்கப்படுவதற்கு முன்னர் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பக்சாரில் சிறையில் தயாரிக்கப்படும் தூக்குக் கயிற்றுக்கு மணிலா கயிறு என்ற அடைமொழியும் உண்டு.

தூக்குக் கயிறானது மற்ற கயிறுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. தொடுவதற்கு மென்மையாக இருந்தாலும் கடினமான நூலிழைகளால் தயாரிக்கப்படுவதாகும். தற்போது பக்சார் சிறையில் தயாரிக்கப்பட்டு வரும் தூக்குக் கயிறுகளில் ‘ஜே34’ என்னும் பிரத்யேக காட்டன் இழை மூலப் பொருளாக உள்ளது. இந்த வகை காட்டன் நூல்கள் தூக்குக் கயிறு தயாரிப்பதற்காக பஞ்சாப்பில் பயிரிடப்பட்டு பின்னர் பதப்படுத்தப்பட்டு பக்சாருக்கு அனுப்பப்படுகிறது.

பின்னர் ஜே34 வகை காட்டன் இழைகள் இணைக்கப்பட்டு நூல்களாக மாற்றப்படுகின்றன. இத்தகைய 154 நூல்கள் நெய்யப்பட்டு ஒரு தொகுப்பாக மாற்றப்படுகிறது. இதுபோன்ற 6 தொகுப்புகள் இணைக்கப்பட்டு தூக்குக் கயிறு தயாரிக்கப்படுகிறது.

குறிப்பாக கயிறு தயாரிக்கும் பணியானது சிறைக் கைதிகளாலேயே மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணியை மேற்பார்வையிட 5 அதிகாரிகளையும் பக்சார் சிறை நிர்வாகம் நியமித்து உள்ளது. 

Next Story