காஷ்மீரில் வீட்டுக்காவல் மற்றும் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த இருந்த 26 தலைவர்கள் விடுதலை
காஷ்மீரில் வீட்டுக்காவல் மற்றும் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த இருந்த 26 தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
ஸ்ரீநகர்,
காஷ்மீரில் சிறையில் அடைக்கப்பட்ட 26 தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து நிலைமைக்கு ஏற்றாற்போல் காவலில் உள்ள மற்ற தலைவர்களும் விடுதலை செய்யப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்யும் தீர்மானம் மற்றும் அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வகை செய்யும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா ஆகியவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இணையதளம் மற்றும் தொலைபேசி சேவைகள் முடக்கப்பட்டன. ராணுவத்தினரின் பாதுகாப்பு வளையத்தில் ஜம்மு-காஷ்மீர் கொண்டுவரப்பட்டு சுமார் 75 ஆயிரம் ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மிகவும் பதற்றம் நிறைந்த பகுதியாக காஷ்மீர் மாறியிருந்தது.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் 4 பேர் சேர்ந்து நடக்கக்கூட முடியாத நிலை இருந்தது. அது மட்டுமின்றி மூத்த தலைவர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா, மிர்வாஸ் உமர்பாரூக் மற்றும் வன்முறையை தூண்டி விடுவார்கள் என்று கருதப்படும் சுமார் 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இந்த மூத்த தலைவர்கள் நால்வர் உள்பட 50க்கும் மேற்பட்ட தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். மற்றவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அங்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 6 மாதங்கள் ஆன நிலையில் மாநிலம் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பிக்கொண்டிருக்கிறது. இதன் விளைவாக அங்கு பாதுகாப்பில் இருந்த 75 ஆயிரம் ராணுவவீரர்களில் 9 ஆயிரம்பேர் பல்வேறு இடங்களில் விலக்கிகொள்ளப்பட்டனர். அதன் படி அங்கு தற்சமயம் 66 ஆயிரம் ராணுவ வீரர்கள் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
வதந்திகள் பரவாமல் தடுக்க மொபைல், இணையதள சேவைகளும் முடக்கப்பட்ட நிலையில் ஜம்மு, சம்பா, கத்துவா, உதம்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இயல்புநிலை திரும்பி வருகிறது. இதனால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதுடன், மொபைல் மற்றும் 2ஜி இணையதள சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்ற பகுதிகளில் உள்ள சூழ்நிலைகளும் ஆய்வு செய்யப்பட்டு, அதற்கேற்ப கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டது.
இந்த நிலையில் கைதான 3 ஆயிரம் பேரில் சுமார் 2 ஆயிரம் பேர் சிறிது காலத்தில் விடுவிக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை பேரில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
மீதமுள்ள சுமார் 1000 பேர் தொடர்ந்து சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 107-வது சட்டப்பிரிவின் கீழ் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே அரசியல் தலைவர்கள் பலர் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இதன் தொடக்கமாக கடந்த மாதம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீர் மாநில முன்னாள் மந்திரி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ க்கள் உட்பட 5 அரசியல்வாதிகள் மாநில நிர்வாகத்தால் விடுவிக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து அங்கு வீட்டுக்காவல் மற்றும் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த மற்ற தலைவர்களில் 26 பேரை காஷ்மீர் அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. மேலும் இவர்களுக்கு எதிரான பொது பாதுகாப்பு சட்டத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அங்கு நிலவும் சூழ்நிலைக்கேற்ப அரசியல் தலைவர்கள் பலர் விடுவிக்கப்படுவர் என காஷ்மீர் மாநிலத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனினும் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என்பது பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
Related Tags :
Next Story