துணிச்சலுக்கான ஜனாதிபதி விருது பெற்ற போலீஸ் டி.எஸ்.பி. 2 பாக். தீவிரவாதிகளுடன் கைது


துணிச்சலுக்கான ஜனாதிபதி விருது பெற்ற போலீஸ் டி.எஸ்.பி. 2 பாக். தீவிரவாதிகளுடன் கைது
x
தினத்தந்தி 12 Jan 2020 4:38 PM IST (Updated: 12 Jan 2020 6:40 PM IST)
t-max-icont-min-icon

துணிச்சலுக்கான ஜனாதிபதி விருது பெற்ற போலீஸ் டி.எஸ்.பி. 2 பாக். தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்ததாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீநகர், 

காஷ்மீர் மாநிலம் எல்லை பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ தயாராக இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து ராணுவம் மற்றும் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில்,  குல்காம் மாவட்டம் மிர்பஜார் அருகே நெடுஞ்சாலையில் ராணுவத்தினர் கடும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 3 பேர் இருந்தனர்.

அதில் ஒருவர் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ் டி.எஸ்.பி. தேவிந்தர் சிங். அவர் துணிச்சலுக்கான ஜனாதிபதி பதக்கத்தை அணிந்திருந்தார். விசாரணையில் அவருடன் இருந்தது பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்பதும் தெரியவந்தது. 

அவர்களுடன் போலீஸ் அதிகாரிக்கு தொடர்பு இருந்துள்ளது. தீவிரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதியான சையத் நவீதுபாபு, ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பை சேர்ந்த ஆசிப் ரத்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள் கை எறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.  2 தீவிரவாதிகளும் சோபியான் மாவட்டத்தில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு வெளியே தப்பிச்செல்ல போலீஸ் டி.எஸ்.பி. தேவிந்தர் சிங் உதவி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 3 பேரையும் தீவிர வீசாரணை நடத்த ரகசிய இடத்துக்கு ராணுவத்தினர் அழைத்து சென்றனர். மேலும் போலீஸ் டி.எஸ்.பி தேவிந்தர் சிங்கின் ஸ்ரீநகர் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஒரு ஏ.கே.47 துப்பாக்கி, 2 பிஸ்டல் துப்பாக்கிகள், 3 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.

போலீஸ் டி.எஸ்.பி. தேவிந்தர் சிங் இன்று பணிக்கு வரவில்லை எனவும், நாளை முதல் 4 நாட்கள் விடுப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தார் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story