குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வன்முறை: மேகாலயாவில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு - ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வன்முறை: மேகாலயாவில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு - ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு
x
தினத்தந்தி 2 March 2020 4:30 AM IST (Updated: 2 March 2020 3:32 AM IST)
t-max-icont-min-icon

மேகாலயாவில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறையில் பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. பதற்ற சூழ்நிலை நீடிப்பதால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஷில்லாங்,

மேகாலயா மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு பூர்வீகமக்கள் எதிராகவும் அம்மாநிலத்தில் வந்து குடியேறியவர்கள் ஆதரவாகவும் உள்ளனர். மாநிலத்தில் பிற மாநிலத்தினர் உள்ளே நுழைய இன்னர் லைன் பெர்மிட் (ஐ.எல்.பி.) அவசியமாகிறது என்றும் இதன் மூலம் பூர்வீக மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மேகாலயா மாநிலம் கிழக்கு காஸி மலைப்பகுதி மாவட்டத்தில் உள்ள இச்சமதி கிராமத்தில் காஸி மாணவர் சங்கத்தினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதவர்கள் நேற்றுமுன்தினம் நடத்திய பேரணி மற்றும் கூட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இந்த கலவரத்தில் மாணவர் சங்க உறுப்பினர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

இதைத்தொடர்ந்து மாநிலத்தில் தலைநகர் ஷில்லாங், காஸி மலைப்பகுதி உள்பட 6 மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் கலவரம் பரவாமல் இருக்க செல்போன், இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ். சேவையும் 5 நாட்களுக்கு நிறுத்தப்பட்டு உள்ளது.

மேகாலயாவில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. மாநில தலைநகர் ஷில்லாங்கின் பல பகுதிகளில் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தது. இதைத்தொடர்ந்து ஷில்லாங்கில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. பதற்றத்தை தணிக்கும் வகையில் மத்திய ரிசர்வ் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கிழக்கு காஸி மாவட்டத்தில் உள்ள பயர்கான் கிராமத்தில் வீட்டில் இருந்த உப்பாஸ் உட்டின் என்பவரை ஆயுதங்களுடன் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் கொலை செய்தது. அந்த நபர்கள் அடையாளம் காணப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. இதற்கிடையே ஷில்லாங்கில் உள்ள மாயஸ்வரம் கிராமத்தை சேர்ந்த ராஜு கரீம் என்ற அரசு ஊழியர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார்.

வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து உள்ளனர். கலவரம் தொடர்பாக மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஏற்பட்டுள்ள சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து முதல்-மந்திரி கொன்ராட் சங்மா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மக்கள் அமைதி காக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story