நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: டெல்லி கலவர பிரச்சினையை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்


நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: டெல்லி கலவர பிரச்சினையை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
x
தினத்தந்தி 2 March 2020 5:00 AM IST (Updated: 2 March 2020 3:53 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் கூடுகிறது. இதில் டெல்லி கலவர பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டுகின்றன.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி தொடங்கியது. மறுநாள் (பிப்ரவரி-1) மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து விவாதம் நடந்து வந்தது. விவாதத்துக்கு பதில் அளித்து நிர்மலா சீதாராமன் கடந்த 11-ந் தேதி பேசினார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு முடிவுக்கு வந்தது.

அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

இன்று (திங்கட்கிழமை) இரண்டாவது அமர்வுக்காக நாடாளுமன்றம் கூடுகிறது.

இந்த அமர்வில், டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் ஏற்பட்ட கலவரங்களில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புயல் வீசும். அனல் பறக்கும் விவாதங்களுக்கும் பஞ்சமிருக்காது.

இதையொட்டி எதிர்க்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் வருமாறு:-

மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி கருத்து தெரிவிக்கையில், “டெல்லியில் சட்டம், ஒழுங்கை நிலை நிறுத்துவதில் அரசு பரிதாபமாக தோற்று விட்டது. கலவரக்காரர்களுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் இடையே ஒருவிதமான தொடர்பு இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். இதனால் ஏற்பட்ட கொடூரமான கொலைகளும், தீ வைப்பு சம்பவங்களும் உலகளவில் இந்தியாவின் மதிப்பை குலைத்து விட்டன” என்று கூறினார்.

மேலும், உள்துறை மந்திரி அமித்ஷா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை மக்களவையில் நாங்கள் எழுப்புவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. கே.கே.ராகேஷ் கூறும்போது, “நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரலை இடதுசாரிக்கட்சிகள் வலுப்படுத்தும். இரு சபைகளிலும் டெல்லி கலவர பிரச்சினையை எழுப்புவோம்” என்று குறிப்பிட்டார்.

அத்துடன், இந்த விவகாரத்தை விதி எண்.267-ன் கீழ் விவாதிக்க வேண்டும் என மாநிலங்களவை தலைவரிடம் அவர் நோட்டீஸ் அளித்துள்ளதாகவும் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா கருத்து தெரிவிக்கையில், “டெல்லி கலவரத்தின்போது போலீசார் செயல்படாமல் போனது குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா பதில் அளிக்க வேண்டும் என்று கோருவோம். பாரதீய ஜனதா தலைவர்களின் வெறுப்பூட்டும் பேச்சு பற்றியும், அவர்கள் கைது செய்யப்படாதது குறித்தும் நாங்கள் பிரச்சினை எழுப்புவோம்” என்று கூறினார்.

நாடாளுமன்றத்தில் டெல்லி கலவர பிரச்சினையை எதிர்க்கட்சிகள் எழுப்புவதை எதிர்பார்த்து, அதை சமாளிக்க பாரதீய ஜனதா கட்சியும் தயாராகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த கூட்டத்தொடரை டெல்லி கலவர பிரச்சினை ஆக்கிரமித்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு ஒரு மாதம் நடக்கிறது. அடுத்த மாதம் 3-ந் தேதி முடிகிறது.


Next Story