நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளி பவன் குப்தாவின் சீராய்வு மனு தள்ளுபடி
நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளி பவன் குப்தாவின் சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
புதுடெல்லி
டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது32), பவன் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்ஷய் குமார் (31) ஆகிய 4 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் தரப்பில் ஒவ்வொருவராக மாறி மாறி தாக்கல் செய்த கருணை மனு, மறு ஆய்வு மனு, சீராய்வு மனு போன்ற சட்ட நடவடிக்கைகளால் அவர்களை தூக்கில் போடுவது 2 முறை தள்ளிப்போய் இருக்கிறது. குற்றவாளிகள் நால்வரில் முகேஷ் குமார் சிங், அக்ஷய் குமார், வினய் குமார் சர்மா ஆகிய மூவரின் கருணை மனுக்கள் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு உள்ளன. தங்கள் கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.
இதற்கிடையே குற்றவாளிகள் 4 பேரையும் தனித்தனியாக தூக்கிலிட உத்தரவிட கோரி, மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு கடந்த 5-ந் தேதி தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து மத்திய அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை வருகிற மார்ச் 5-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில், குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 3-ந் தேதி தூக்கில் போட டெல்லி கோர்ட்டு கடந்த 17-ந்தேதி உத்தரவிட்டது.
இந்தநிலையில் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தரப்பில், தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 27 ந்தேதி மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை தவறானது என்றும் தன்னுடைய கருணை மனு தவறான அடிப்படையில் நிராகரிக்கப்பட்டு இருப்பதாகவும் எனவே தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் பவன் குமார் குப்தாவின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
Related Tags :
Next Story