டெல்லி வன்முறையின்போது துப்பாக்கியை காட்டி மிரட்டிய ஷாருக் என்பவர் கைது


டெல்லி வன்முறையின்போது துப்பாக்கியை காட்டி மிரட்டிய  ஷாருக் என்பவர் கைது
x
தினத்தந்தி 3 March 2020 1:35 PM IST (Updated: 3 March 2020 1:35 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி வன்முறையின்போது போலீசாரை நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டிய ஷாருக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

கடந்த வாரம் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கும், அதே இடத்தில் சட்டத்திற்கு ஆதரவாக போராட  நடத்த வந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  இந்த மோதல் கலவரமாக வெடித்த நிலையில், வன்முறை சம்பவத்தில் 46 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். 

டெல்லி வன்முறையின் போது,  ஜபார்பாத் பகுதியில் சிவப்பு நிற டி சர்ட் அணிந்திருந்த நபர் ஒருவர் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டினார். சமூக வலைத்தளங்களிலும் இந்த புகைப்படங்கள் பரவின.  

இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். போலீசார் விசாரணையில், தலைமறைவான அந்த நபர் பெயர் ஷாருக் என்பதும், அவர் உத்தரப்பிரதேசத்தில் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது.  இந்த நிலையில்,  ஷாம்லி மாவட்டத்தில்  பதுங்கியிருந்த ஷாருக்கை   போலீசார் கைது செய்துள்ளனர். 

Next Story