வோடபோன் இந்தியா நிறுவனம் ரூ.3,042 கோடி நிலுவை தொகையை அரசுக்கு செலுத்தியது


வோடபோன் இந்தியா நிறுவனம் ரூ.3,042 கோடி நிலுவை தொகையை அரசுக்கு செலுத்தியது
x
தினத்தந்தி 3 March 2020 6:38 PM IST (Updated: 3 March 2020 6:38 PM IST)
t-max-icont-min-icon

வோடபோன் இந்தியா நிறுவனம் மத்திய அரசின் தொலை தொடர்பு துறைக்கு ரூ.3 ஆயிரத்து 42 கோடி நிலுவை தொகையை இன்று செலுத்தியுள்ளது.

புதுடெல்லி,

வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட 15 தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம் உள்ளிட்ட வகையில் ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி பாக்கியை நள்ளிரவுக்குள் செலுத்துமாறு கடந்த 14ந்தேதி மத்திய அரசின் தொலை தொடர்பு துறை அதிரடியாக உத்தரவிட்டது.

இந்த உத்தரவு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24ந்தேதி சுப்ரீம் கோர்ட்டினால் பிறப்பிக்கப்பட்டது ஆகும்.

இந்த உத்தரவை வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட 15 தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் கடந்த ஜனவரி மாதம் 24ந்தேதிக்குள் ஏற்று செயல்படுத்தி இருக்க வேண்டும்.  ஆனால் அவை செயல்படுத்தவில்லை.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு மாறாக, இந்த தொலை தொடர்பு நிறுவனங்கள் அந்த தொகையை செலுத்துமாறு வலியுறுத்த வேண்டாம், செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டாம் என தொலை தொடர்பு துறை டெஸ்க் அதிகாரி ஜனவரி 23ந்தேதி ஒரு உத்தரவை (சுற்றறிக்கை) அனுப்பி உள்ளார்.

இதுபற்றி அறிந்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அருண் மிஷ்ரா கடந்த 14ந்தேதி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.  இதனை தொடர்ந்தே தொலைதொடர்பு துறை இந்த உத்தரவை பிறப்பித்தது.

இதன்படி, சுனில் மிட்டல் தலைமையிலான ஏர்டெல் நிறுவனம் ஆனது, உரிம கட்டணம் மற்றும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு கட்டணம் ஆகியவை உள்பட ரூ.35 ஆயிரத்து 586 கோடி தொகையை செலுத்த வேண்டும் என்று அரசு தெரிவித்தது.

இதனை தொடர்ந்து, கடந்த 17ந்தேதி, ஏர்டெல் நிறுவனம் ரூ.10 ஆயிரம் கோடியை அரசிடம் செலுத்தியது.

டெலினார் நிறுவனம் பார்தி ஏர்டெல்லுடன் முன்பே இணைக்கப்பட்டு விட்டது.  இதனால் அதனையும் சேர்த்து, பார்தி ஏர்டெல் நிறுவனம் சார்பில் ரூ.9 ஆயிரத்து 500 கோடி தொகையும், பார்தி ஹெக்சாகாம் சார்பில் ரூ.500 கோடி தொகையும் செலுத்தப்பட்டன.

இதேபோன்று, வோடபோன் ஐடியா நிறுவனம் மொத்தம் ரூ.53 ஆயிரம் கோடி நிலுவை தொகையை அரசுக்கு வழங்க வேண்டும்.  இதனை அடுத்து, வோடபோன் நிறுவனம் கடந்த 17ந்தேதி மத்திய அரசின் தொலை தொடர்பு துறைக்கு ரூ.2,500 கோடி வழங்கியது.

தொடர்ந்து கடந்த 20ந்தேதி, வோடபோன் ஐடியா நிறுவனம் மத்திய அரசின் தொலை தொடர்பு துறைக்கு ரூ.1,000 கோடி செலுத்தியது.

டாடா டெலிசர்வீசஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய நிலுவை தொகையான ரூ.14 ஆயிரம் கோடியில், கடந்த 17ந்தேதி ரூ.2 ஆயிரத்து 197 கோடி செலுத்தி இருந்தது.  இந்நிலையில், அந்நிறுவனம் கூடுதலாக ரூ.2 ஆயிரம் கோடியை தொலை தொடர்பு துறைக்கு இன்று செலுத்தியுள்ளது.

வோடபோன் இந்தியா நிறுவனம் ரூ.3 ஆயிரத்து 42 கோடியும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.1,053 கோடியும், பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ.1,950 கோடியும் இன்று செலுத்தி உள்ளது.

Next Story