டெல்லி வன்முறை ஒரு தலைப்பட்சமானது, நன்கு திட்டமிடப்பட்டவை - சிறுபான்மை ஆணையம்


Photo Credit: Sandeep Saxena
x
Photo Credit: Sandeep Saxena
தினத்தந்தி 4 March 2020 3:07 PM IST (Updated: 4 March 2020 3:36 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி வன்முறை ஒரு தலைப்பட்சமானது, நன்கு திட்டமிடப்பட்டவை என சிறுபான்மை ஆணையம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி

கடந்த வாரம் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கும், அந்த சட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல்  வன்முறையாக  வெடித்தது. இந்த வன்முறை  சம்பவத்தில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். 

 டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 1427 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது 436 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

வடகிழக்கு டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை டெல்லி சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் ஜாபருல் இஸ்லாம் கான் அடங்கிய தூதுக்குழு ஆய்வு செய்து அறிக்கை  வெளியிட்டு உள்ளது
அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

வடகிழக்கு டெல்லியில்  வெடித்த வன்முறை ஒரு தலைப்பட்சமானது,  நன்கு திட்டமிடப்பட்டவை. மேலும் கடைகள் மற்றும் வீடுகளுக்கு அதிகபட்ச சேதம் விளைவிக்கும் வகையில் உள்ளூர் மக்களிடமிருந்து ஆதரவை பெற்று நடத்தப்பட்டு உள்ளது. 

வன்முறை காரணமாக ஏற்பட்ட சேதத்தின் அளவைக் கருத்தில் கொண்டு டெல்லி அரசு அறிவித்த இழப்பீடு போதுமானதாக இல்லை.

நாங்கள் சென்ற எல்லா இடங்களிலும் முஸ்லிம் வீடுகள், கடைகள் மற்றும் பட்டறைகளுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. பிப்ரவரி 24-25 தேதிகளில் தப்பி ஓடிய பின்னர் மக்கள் சேதமடைந்த வீடுகளுக்கு முதன்முறையாக வருகை தருவதை நாங்கள் கண்டோம்.  ஆனால் வீடுகள் மற்றும் கடைகள் மோசமாக சேதமடைந்து குப்பைகளாக கிடந்ததால், அவர்கள் எப்படி  அங்கு வாழ  முடியும்.

முஸ்லீம்களுக்கு சொந்தமான ஒரு பயண நிறுவனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஷோரூம் போன்ற கடைகள் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன, அதே நேரத்தில் இந்துக்கு சொந்தமான கடைகளுக்கு எந்த சேதாரமும் இல்லை.

பிப்ரவரி 23 அன்று வன்முறை பாஜக தலைவர் கபில் மிஸ்ராவின் அச்சுறுத்தல் மற்றும் இறுதி எச்சரிக்கைக்கு பின்னரே தொடங்கி உள்ளது.

சாலையின் ஒரு பக்கத்தில் முஸ்லிம் வீடுகள் மற்றும் கடைகள் உள்ளன, மறுபுறம் இந்து வீடுகள் மற்றும் கடைகள் உள்ளன. இரு பகுதிகளும் கொள்ளையடித்து எரிக்கப்பட்டன. எரிந்த பெட்ரோல் பம்பில், உரிமையாளர் மஹிந்தர் அகர்வால் 30 வாகனங்கள் அங்கு தீக்கிரையாக்கப்பட்டதாகக் கூறி உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Next Story