நித்தியானந்தாவுக்கு சொந்தமான சொத்துக்களின் பட்டியலை தாக்கல் செய்ய ராம்நகர் நீதிமன்றம் உத்தரவு
நாடு முழுவதும் உள்ள நித்தியானந்தாவுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்துக்களின் பட்டியலை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய சிஐடி போலீசாருக்கு ராம்நகர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீட ஆசிரமம் அமைந்துள்ளது. அவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் புகாரில் நித்யானந்தா கைது செய்யப்பட்டார். அவருக்கு கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதன் பிறகு அவர், கீழ்கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கின் விசாரணைக்காக நேரில் ஆஜராகவில்லை.
இதையடுத்து அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பன் என்பவர் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து, நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய கோரினார். அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விளக்கம் அளிக்கும்படி நித்யானந்தாவுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியது.
இந்த நிலையில் அந்த மனு கடைசியாக கடந்த மாதம் 3-ந் தேதி ஐகோர்ட்டில் நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல், நித்யானந்தா ஆன்மிக சுற்றுலா மேற்கொண்டுள்ளதாகவும், அதனால் அவருக்கு அனுப்பப்பட்ட நோட்டீசு, அவரது சீடரிடம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதற்கு நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார். இறுதி விசாரணை முடிவடைந்ததை அடுத்து நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்து நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா கடந்த சில வாரங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கினார்.
இதற்கிடையே ராம்நகர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா மீதான வழக்கு பிப்ரவரி 19-ம் தேதி விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நித்தியானந்தாவின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை ராம்நகர் நீதிமன்றம் உறுதி செய்தது. அத்துடன் நித்தியானந்தாவை உடனே கைது செய்யவும் ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் நித்யானந்தாவிற்கு எதிரான பாலியல் வழக்கு மீண்டும் இன்று ராம்நகர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கம் போல இன்றும் நித்தியானந்தா விசாரணைக்கு ஆஜராகவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டும் பல வாரங்களாக நேரில் ஆஜராகாதா நித்யானந்தா மற்றும் அவர் தரப்பினருக்கு, இனியும் விலக்கு அளிக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.
தொடர்ந்து நித்யானந்தா மட்டுமின்றி, அவருக்கு ஜாமீன் மற்றும் அடைக்கலம் கொடுத்த அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் எனவும், சிஐடி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து கர்நாடகா சிஐடி போலீசார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நித்தியானந்தாவை உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் கைது செய்து ஆஜர் படுத்த ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நாடு முழுவதும் நித்தியானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமங்கள், அசையும், அசையா சொத்துக்களின் பட்டியலை வரும் 23-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய சிஐடி போலீசாருக்கு உத்தரவிட்டார். அன்றைய தினம் நித்தியானந்தா ஆஜராகாவிட்டால் அவரது சொத்துக்கள் முடக்கப்படும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதனிடையே உச்சநீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவில் ராம்நகர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா ஆஜராவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது. மேலும் நித்தியானந்தா உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர்ந்த லெனின் கருப்பனுக்கு ராம்நகர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள வாரண்டையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story