வன்முறை பாதித்த வடகிழக்கு டெல்லியை பார்வையிட ராகுல் காந்தி புறப்பட்டு சென்றார்


வன்முறை பாதித்த வடகிழக்கு டெல்லியை பார்வையிட ராகுல் காந்தி புறப்பட்டு சென்றார்
x
தினத்தந்தி 4 March 2020 6:01 PM IST (Updated: 4 March 2020 6:01 PM IST)
t-max-icont-min-icon

வன்முறை பாதித்த வடகிழக்கு டெல்லிக்கு ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி அடங்கிய குழு புறப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வந்த நிலையில், வடகிழக்கு டெல்லியின் ஜாப்ராபாத், மாஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன.  இந்த போராட்டத்துக்கு எதிராக, மற்றொரு பிரிவினரும் கடந்த 23ந்தேதி போராட்டம் நடத்த முயன்றனர்.

இதில் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். ஆனால் இந்த மோதல் மறுநாளில் மிகப்பெரும் வன்முறையாக வெடித்தது. ஜாப்ராபாத், மாஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா, யமுனா விகார் என வடகிழக்கு டெல்லி முழுவதும் வன்முறை பரவியது.

சில இடங்களில் துப்பாக்கிச்சூடும் நடந்தது. இதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். தலைமை காவலர் மற்றும் உளவு பிரிவு அதிகாரி உள்பட பல உயிரிழப்புகளும் நிகழ்ந்தன.  இதையடுத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது. மேலும் வன்முறை பாதித்த பகுதிகளில் ‘144’தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

வன்முறையில் சிக்கி காயமடைந்தவர்களில் பலர், சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் மரணமடைந்தனர். இதனால் வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து 47 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், டெல்லி வன்முறை பற்றி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.  இதனால் கடந்த 3 நாட்களாக அவை முடங்கியுள்ளது.

டெல்லியில் வன்முறை பாதித்த பகுதிகளை பார்வையிட ராகுல் காந்தி செல்ல இருக்கிறார் என தகவல்கள் வெளியாகின.

இதுபற்றி அக்கட்சியின் டெல்லி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர் அடங்கிய குழு ஒன்று வன்முறை பாதித்த வடகிழக்கு டெல்லி பகுதிகளை பார்வையிட இன்று செல்கின்றனர் என கூறினார்.

டெல்லி வன்முறை பற்றி விவாதம் நடத்தும் வரை நாங்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உள்ளே மற்றும் வெளியே தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர் கூறினார்.  இதனிடையே, வன்முறை பாதித்த வடகிழக்கு டெல்லிக்கு ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி அடங்கிய குழு ஒன்று புறப்பட்டு உள்ளது.

Next Story