கொரோனா வைரசை பரப்ப டெல்லிக்கு போகிறீர்களா? ராகுல் காந்திக்கு பா.ஜ.க. எம்.பி. கேள்வி


கொரோனா வைரசை பரப்ப டெல்லிக்கு போகிறீர்களா? ராகுல் காந்திக்கு பா.ஜ.க. எம்.பி. கேள்வி
x
தினத்தந்தி 4 March 2020 6:46 PM IST (Updated: 4 March 2020 6:46 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரசை பரப்ப டெல்லிக்கு போகிறீர்களா? என்று ராகுல் காந்திக்கு பா.ஜ.க. எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வந்த நிலையில், வடகிழக்கு டெல்லியின் ஜாப்ராபாத், மாஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன.  இந்த போராட்டத்துக்கு எதிராக, மற்றொரு பிரிவினரும் கடந்த 23ந்தேதி போராட்டம் நடத்த முயன்றனர்.

இதில் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் தாக்குதலில் ஈடுபட்டனர்.  இதனால் போராட்டம் வன்முறையாக வெடித்தது.  தொடர்ந்து 3 நாட்களாக நடந்த வன்முறை சம்பவத்தில் 47 பேர் பலியாகி உள்ளனர்.  200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.

வன்முறை சம்பவம் பற்றி விவாதம் மேற்கொள்ள வலியுறுத்தி நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது.  இந்நிலையில், வன்முறை நடந்து ஒரு வாரம் ஆன நிலையில், டெல்லியில் வன்முறை பாதித்த பகுதிகளை பார்வையிட ராகுல் காந்தி இன்று புறப்பட்டு சென்றார்.

இதுபற்றி பா.ஜ.க. எம்.பி. ரமேஷ் பிதூரி செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, நீங்கள் டெல்லிக்கு செல்வதற்கு முன் உங்களிடம் நான் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன்.  கடந்த 6 நாட்களுக்கு முன் இத்தாலி நாட்டில் இருந்து நீங்கள் வந்துள்ளீர்கள்.  விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை எடுத்து கொண்டீர்களா? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீங்கள் எடுத்துள்ளீர்களா? அல்லது கொரோனா வைரசை பரப்ப டெல்லிக்கு செல்கிறீர்களா? என்று கேட்டு உள்ளார்.

Next Story