கொரோனா வைரஸ்: மாநில அரசுகளுக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சுற்றறிக்கை


கொரோனா வைரஸ்: மாநில அரசுகளுக்கு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சுற்றறிக்கை
x
தினத்தந்தி 4 March 2020 7:49 PM IST (Updated: 4 March 2020 7:49 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவுவதை தவிர்க்கும் வகையில் பள்ளிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

புதுடெல்லி,

சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.  நாளுக்கு நாள் தொடர்ந்து வைரஸ் பரவலின் தீவிரம் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் உலகம் முழுவதும் பரவிய  கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியது. இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.

இதற்கிடையே கொரோனா தொற்று குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார். பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில்   கொரோனா தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது. அதில்,

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.  இருமல், தும்மல் உள்ள மாணவர்கள் கைக்குட்டை அல்லது டிஸ்யூ பேப்பர் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். உடல் நலக்குறைவு ஏற்பட்டால் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் அந்த மாநில அரசுகள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். 

அடிக்கடி கை கழுவுதல், தும்மல் ஏற்படும் நேரத்தில் கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பர்கள் பயன்படுத்த வேண்டும். முழுநீள கை சட்டையை அணியவேண்டும். தொற்றுக்கள் பரவாவண்ணம் இருப்பதற்கான பயிற்சியை கொடுக்க வேண்டும். தொடர்ந்து அதற்கான அறிவுரைகளையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். 

காய்ச்சல் அல்லது உடல் நலக்குறைவு ஏற்பட்டால் பள்ளிக்கு வருவதையும், பொது இடங்களுக்கு செல்வதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் இந்த அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. 

Next Story