டெல்லி வன்முறை: 531 வழக்குகள் பதிவு; 1,647 பேர் கைது


டெல்லி வன்முறை:  531 வழக்குகள் பதிவு; 1,647 பேர் கைது
x
தினத்தந்தி 4 March 2020 9:52 PM IST (Updated: 4 March 2020 9:52 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய 531 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வந்த நிலையில், வடகிழக்கு டெல்லியின் ஜாப்ராபாத், மாஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன.  இந்த போராட்டத்துக்கு எதிராக, மற்றொரு பிரிவினரும் கடந்த 23ந்தேதி போராட்டம் நடத்த முயன்றனர்.

இதில் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். ஆனால் இந்த மோதல் மறுநாளில் மிகப்பெரும் வன்முறையாக வெடித்தது. ஜாப்ராபாத், மாஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா, யமுனா விகார் என வடகிழக்கு டெல்லி முழுவதும் வன்முறை பரவியது.

சில இடங்களில் துப்பாக்கிச்சூடும் நடந்தது. இதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். தலைமை காவலர் மற்றும் உளவு பிரிவு அதிகாரி உள்பட பல உயிரிழப்புகளும் நிகழ்ந்தன.  இதையடுத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது. மேலும் வன்முறை பாதித்த பகுதிகளில் ‘144’தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

வன்முறையில் சிக்கி காயமடைந்தவர்களில் பலர், சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் மரணமடைந்தனர். இதனால் வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து 47 ஆக உயர்ந்தது.

இதுபற்றி டெல்லி போலீசார் கூறும்பொழுது, இதுவரை ஆயுத சட்டத்தின் கீழ் 47 வழக்குகள் உள்பட 531 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.  1,647 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்துள்ளனர்.

Next Story