இந்தியர்கள் பயப்பட தேவையில்லை - இந்திய பெண் விஞ்ஞானி கருத்து
கொரோனா வைரஸ் குறித்து இந்தியர்கள் பயப்பட தேவையில்லை என்று இந்திய பெண் விஞ்ஞானி ககன்தீப் காங் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி பேராசிரியையும், இந்திய முன்னணி ஆராய்ச்சியாளரும், விஞ்ஞானியுமான ககன்தீப் காங், ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் குறித்து இந்தியர்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. இந்த நோய் உறுதி செய்யப்பட்ட ஐந்தில் நான்கு பேர், தாங்களாகவே குணமடைவார்கள். காய்ச்சல், இருமலுக்கு பாரசிட்டமாலை தவிர வேறு மருந்து தேவைப்படாது.
ஐந்தாவது நபர் வேண்டுமானால், டாக்டரை பார்க்க வேண்டும் அல்லது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட வேண்டும். மூச்சுத்திணறல் இருந்தால் உடனடியாக டாக்டரை பார்க்க வேண்டும். இந்த காய்ச்சல், குழந்தைகளை தீவிரமாக பாதிப்பது இல்லை. முதியவர்களைத்தான் பெரிதும் பாதிக்கிறது. நீரிழிவு, ரதத் கொதிப்பு, இதய நோய் உள்ளவர்களையும் பெரிதும் தாக்குகிறது. இப்போதைக்கு இதற்கு தடுப்பூசி இல்லை. ஆனால், அடுத்த ஆண்டு வந்து விடும் என்று எதிர்பார்க்கிறோம்.
பொதுமக்கள், தங்களுக்கு வைரஸ் தாக்கியதாக சந்தேகம் எழுந்தால், உடனே சுகாதார அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும். பொதுமக்கள், கைகளை நன்றாக கழுவ வேண்டும். முக உறுப்புகளை தொடக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story