மோடியின் ஆட்சியில் ஒரு குண்டுவெடிப்பு கூட நடக்கவில்லை - மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பெருமிதம்


மோடியின் ஆட்சியில் ஒரு குண்டுவெடிப்பு கூட நடக்கவில்லை - மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பெருமிதம்
x
தினத்தந்தி 8 March 2020 3:04 AM GMT (Updated: 8 March 2020 3:04 AM GMT)

பிரதமர் மோடியின் தீவிரமான கண்காணிப்புக்கு உரிய ஆட்சியில் கடந்த 6 ஆண்டுகளில் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் கூட நிகழவில்லை என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பெருமிதம் தெரிவித்தார்.

மும்பை,

புனேயில் உள்ள பி.ஜே. மருத்துவக்கல்லூரியில் நேற்று ஜன் அஷாதி மருந்து மைய தொடக்க நாள் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் பிரதமர் மோடி ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் பேசினார். இதையடுத்து விழாவில் மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பேசியதாவது:-

குறைந்த செலவில், ஏழை, எளிய மக்களுக்கு தரமான மருந்துகளும், மருத்துவ சிகிச்சையும் கிடைக்க வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடி அரசின் மந்திரம். இதற்காக பல்வேறு சுகாதார திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதற்காக 6 ஆயிரம் ஜன் அஷாதி மருந்து கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினசரி 2 முதல் 3 லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆயுஷ்யம் பாரத் திட்டத்தின் மூலம் யோகா பயிற்றுவிக்கப்படுகிறது. இது மக்கள் மீதான மோடி அரசின் அக்கறையை காட்டுகிறது.

2014-ம் ஆண்டு மோடி அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், நாட்டின் பல்வேறு நகரங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் வாடிக்கையாக இருந்தன. புனே, வதோதரா, ஆமதாபாத், டெல்லி மற்றும் மும்பையில் குண்டுவெடிப்புகள் நடந்தன. ஒவ்வொரு 10 நாட்களுக்கு இடையே ஏதாவது ஒரு இடத்தில் குண்டு வெடித்தது. அதில் அப்பாவி மக்கள் பலியா னார்கள்.

ஆனால், பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் கடந்த 6 ஆண்டுகளில் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் கூட நிகழவில்லை. பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டது தான் இதற்கு காரணமாகும். அதுமட்டுமல்லாமல் உள்நாட்டுப் பாதுகாப்பை தீவிரமாக்கி, அதற்கு அதிகமான முக்கியத்துவத்தை மோடி அரசு வழங்கியது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story