கொரோனா வைரஸ் எதிரொலி: நாடு முழுவதும் 52 இடங்களில் பரிசோதனை கூடங்கள் - மத்திய அரசு


கொரோனா வைரஸ் எதிரொலி:  நாடு முழுவதும் 52 இடங்களில் பரிசோதனை கூடங்கள் - மத்திய அரசு
x
தினத்தந்தி 8 March 2020 3:12 PM IST (Updated: 8 March 2020 3:12 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் எதிரொலியால் நாடு முழுவதும் 52 இடங்களில் பரிசோதனை கூடங்களை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அனைத்து மாநிலங்களும் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு உத்தர விட்டுள்ளது. தற்போது இந்தியாவில் 39 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள்  அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கி இருக்கிறதா? என்பதை கண்டுபிடிக்க ஒரு சில இடங்களில் மட்டுமே பரிசோதனை கூடங்கள் இருந்தன.

ஆனால், நோய் தாக்குதல் பல இடங்களிலும் பரவுவதால் இதன் பரிசோதனை கூடங்களை அதிகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் 52 இடங்களில் பரிசோதனை கூடங்களை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இது மட்டும் அல்லாமல், பாதிக்கப்பட்டதாக சந்தேகப்படும் நபர்களிடம் இருந்து மாதிரிகளை சேகரித்து அனுப்புவதற்காக தனியாக 57 பரிசோதனை கூடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதுவரை 3 ஆயிரத்து 404 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. சிலருக்கு 2 முறை பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை 4 ஆயிரத்து 58 பரிசோதனைகள் நடத்தப் பட்டுள்ளன. சீனாவில் உள்ள உகானில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள 654 பேர் ஜப்பான் கப்பலில் இருந்து அழைத்து வரப்பட்ட 236 பேர் ஆகியோரும் பரிசோதனை
செய்யயப்பட்டவர்களில் அடங்குவார்கள். 

இதற்கிடையே கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக முக கவசம் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. எனவே, கடைகளில் அதன் விலையை உயர்த்தி விற்பனை செய்கிறார்கள்.  இவ்வாறு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுகாதார மந்திரி ஹர்ச வர்த்தன் கூறியுள்ளார்.

Next Story