மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு: கேரளாவில் தியேட்டர்கள் மூடப்பட்டன; 31-ந்தேதிவரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு: கேரளாவில் தியேட்டர்கள் மூடப்பட்டன; 31-ந்தேதிவரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
x
தினத்தந்தி 11 March 2020 5:00 AM IST (Updated: 11 March 2020 3:11 AM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு 31-ந்தேதிவரை விடுமுறை விடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் மூடப்பட்டன.

திருவனந்தபுரம்,

இந்தியாவில் முதலில் கேரளாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது. அவர்கள் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். அதன்பின்னர், சில நாட்களுக்கு முன்பு, இத்தாலியில் இருந்து திரும்பிய பத்தனம்திட்டாவை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது. அவர்களது உறவினர்கள் 2 பேருக்கும் நோய் தொற்றியது.

பின்னர், நேற்று முன்தினம் 3 வயது ஆண் குழந்தைக்கு நோய் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், கேரளாவில் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக கேரள மந்திரிசபை கூட்டத்துக்கு பிறகு, முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார். இந்த 6 பேரும், இத்தாலிக்கு சென்று விட்டு திரும்பிய குடும்பத்துடன் நெருங்கிய பழக்கம் கொண்டவர்கள் ஆவர்.

பின்னர், நேற்று மாலை, ஏற்கனவே பாதிக்கப்பட்ட 3 வயது குழந்தையின் தாய், தந்தைக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இத்தகவலை சுகாதாரத்துறை மந்திரி சைலஜா தெரிவித்தார். இதையடுத்து, கேரளாவில் கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில், மொத்தம் ஆயிரத்து 116 பேர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 149 பேர் ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகளிலும், மற்ற 967 பேர் அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கேரளாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு 31-ந்தேதிவரை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் 7-ம் வகுப்புவரை மாணவர்களுக்கு தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், 8 முதல் 12-ம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு வழக்கம்போல் தேர்வு நடைபெறும். மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் மாணவர்கள், தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

அனைத்து தியேட்டர்களும் 31-ந்தேதிவரை மூடப்படுகின்றன. திருமணங்கள் நடத்த தடையில்லை என்றபோதிலும், அதில் பங்கேற்பதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அரசு நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. கோவில், தேவாலய திரு விழாக்களை தவிர்க்குமாறும், சபரிமலைக்கு வருவதை தவிர்க்குமாறும் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கிடையே, பத்தனம்திட்டா மாவட்ட ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பிறகு அவரை தேடிக்கண்டுபிடித்து மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் முதல்முறையாக நேற்று முன்தினம் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று மேலும் 3 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி பி.ஸ்ரீராமுலு தெரிவித்தார். இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

நோயாளிகளும், அவர்களின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த 40 பேர் கொண்ட குழுவினர், கடந்த 1-ந்தேதி துபாயில் இருந்து மும்பைக்கு விமானத்தில் வந்து சேர்ந்தனர். அவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியது.

நேற்று மேலும் 3 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 2 பேர், உறவினர்கள். மற்றொருவர், அவர்கள் பயணம் செய்த காரின் டிரைவர் ஆவார்.


Next Story