நாடு முழுவதும் 52 இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் - சுகாதாரத்துறை


நாடு முழுவதும் 52 இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் - சுகாதாரத்துறை
x
தினத்தந்தி 12 March 2020 4:43 PM IST (Updated: 12 March 2020 4:43 PM IST)
t-max-icont-min-icon

பெரும்பாலும் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சீனாவின் உகான் நகரில் உண்டான கொரோனா வைரஸ் 119 நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிப்புக்குள்ளாகினர். இந்த வைரஸ், இந்தியாவிலும் பாதிப்பை ஏ்றபடுத்தியுள்ளது. கேரளா, டெல்லி, தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், இந்தியர்கள் 57 பேர்.  வெளிநாட்டினர் 17 பேர் ஆவார்கள். இதில், கேரளாவில் 17 பேரும், மராட்டியத்தில் 11 பேர், உ.பி.,யில் 10 பேர், டெல்லியில் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் நிலைமை குறித்து  மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 73 பேரில் இந்தியர்கள் 57 பேர், வெளிநாட்டினர் 17 பேர். பெரும்பாலும் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும். மேலும்  நாடு முழுவதும் 52 இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமல்ல, தனி நபர்களிடம் இருந்து விலகியிருந்தாலே போதுமானது. பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. எங்களிடம் ஏற்கனவே 1 லட்சம் சோதனை கருவிகள் உள்ளன, கூடுதல் சோதனை கருவிகள் ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. 

அதிக வெப்பநிலையில் கொரோனா வைரஸ் இருந்தால் அது உயிர்வாழ்வதில் சிரமம்  என்று பொதுவாக எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் கண்டுபிடிக்க1.5 முதல் 2 ஆண்டுகள் வரை ஆகும் என்று அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Next Story