மத்தியபிரதேசத்தில் ராஜினாமா செய்த 22 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்


மத்தியபிரதேசத்தில் ராஜினாமா செய்த 22 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்
x
தினத்தந்தி 12 March 2020 8:49 PM IST (Updated: 12 March 2020 8:49 PM IST)
t-max-icont-min-icon

மத்தியபிரதேசத்தில் ராஜினாமா செய்த 22 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்ப்பி உள்ளார்.

போபால், 

மத்தியபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வலுவான தலைவராக இருந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியா அக்கட்சியில் இருந்து விலகினார். அவரது ஆதரவு மந்திரிகள் 6 பேர் உள்ளிட்ட 22 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்வதாக சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினார். இதனால் அங்கு முதல்–மந்திரி கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

இந்த நிலையில் ராஜினாமா செய்த 22 எம்.எல்.ஏ.க்களுக்கும் சட்டசபை சபாநாயகர் பிரஜாபதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ‘சபாநாயகரை நேரில் சந்தித்து ஏன் ராஜினாமா கடிதத்தை வழங்கவில்லை?, தாங்களாகவே இந்த முடிவை எடுத்தீர்களா? அல்லது வேறு யாரும் நிர்பந்தம் செய்தார்களா? என, நாளை (வெள்ளிக்கிழமை) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே கமல்நாத் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள வருகிற 16–ந்தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கவர்னர் லால்ஜி தாண்டன் மற்றும் சட்டசபை சபாநாயகரை சந்தித்து முறையிடப்போவதாக பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

228 இடங்களை கொண்ட மத்திய பிரதேச சட்டசபையில் 22 பேர் ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரசின் பலம் 121ல் இருந்து 99 ஆக குறைந்துள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் ஆட்சியமைக்க 105 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால், காங்கிரஸ் ஆட்சி கவிழும் சூழல் உருவாகி உள்ளது.

Next Story