வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த பரூக் அப்துல்லாவை விடுவிக்க முடிவு


வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த பரூக் அப்துல்லாவை விடுவிக்க முடிவு
x
தினத்தந்தி 13 March 2020 3:04 PM IST (Updated: 13 March 2020 4:05 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீரில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்த பரூக் அப்துல்லாவை விடுவிக்க ஜம்மு காஷ்மீர் அரசு முடிவு செய்துள்ளது.

ஜம்மு,

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவை இந்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இதையடுத்து, காஷ்மீரில் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முக்கிய அரசியல் தலைவா்கள், பிரிவினைவாத தலைவா்கள் பலா் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.

காஷ்மீரில் பயங்கரவாதத்தையும், வன்முறையையும் தூண்ட பல்வேறு வழிகளில் பாகிஸ்தான் முயற்சித்தபோதும் பாதுகாப்புப் படையினரின் தீவிர நடவடிக்கையால் அவை முறியடிக்கப்பட்டன. இப்போது, அங்கு அமைதி திரும்பிவிட்ட நிலையில், கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுவிட்டன. வீட்டுக் காவலில் உள்ள அரசியல் தலைவா்களும் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனா்.

இந்தநிலையில் ஆகஸ்ட் 5-ம் தேதி  முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா, அவரது மகன் ஒமர் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டனர். பின்னர், இருவர் மீதும் பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. அவரை விடுவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இந்நிலையில், வீட்டுக்காவலில் இருந்து பரூக் அப்துல்லாவை விடுவிக்க  காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.  இன்று இரவு அல்லது நாளை பரூக் அப்துல்லா விடுவிக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட போது, பரூக் அப்துல்லா வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 7 மாதங்களுக்கு பின்னர் வீட்டுக்காவலில் இருந்த பரூக் அப்துல்லா விடுதலை ஆகுகிறார்.

மெகபூபா முப்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என்பது பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.  அங்கு நிலவும் சூழ்நிலைக்கேற்ப அரசியல் தலைவர்கள் பலர் விடுவிக்கப்படுவர் என காஷ்மீர் மாநிலத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Next Story