கொரோனா வைரஸைத் தடுப்பதில் சார்க் நாடுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் - பிரதமர் மோடி
கொரோனா வைரஸைத் தடுப்பதில் சார்க் நாடுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
புதுடெல்லி
உலகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா வைரஸைத் தடுப்பதில் சார்க் நாடுகள் இணைந்து திட்டத்தை உருவாக்கிச் செயல்படுத்துவதில் உலகிற்கே எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது. உலகம் முழுவதும் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சீனாவில் மட்டும் கொரோனா வைரசால் 3042 பேர் பலியாகியுள்ளனர். தென்கொரியா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.
இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரசால் இதுவரை 78 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தீவிரமான தடுப்பு வழிமுறைகளையும் நடை முறைப்படுத்தி வருகிறது. மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு பிரச்சாரங்களைச் செய்து வருகிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பாக வேண்டுகோள் விடுத்துள்ளார். சார்க் நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, பூட்டான், மாலத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வீடியோவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் எதிர்த்து போரிடுவது தொடர்பாக சார்க் நாடுகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து திட்டமிட்டு செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். நம்முடைய நாட்டு மக்கள் ஆரோக்கியமாகவும், நலமாகவும் வாழ்வதற்கு நாம் அனைவரும் வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் கலந்தாய்வு செய்ய வேண்டும்.
நம்முடைய இந்த பூமி கோவிட்-19 வைரஸை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. கொரோனா வைரஸை எதிர்க்கவும், தடுக்கவும் பல்வேறு விதங்களில், அரசுகள், நிர்வாகிகள், அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள்.
உலகில் குறிப்பிட்ட அளவு மக்கள் தொகையைத் தெற்காசியா கொண்டுள்ளது. மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதை நாம் ஒவ்வொரு நேரத்திலும் உறுதி செய்ய வேண்டும். சார்க் நாடுகள் அனைத்தும் இணைந்து ஒன்றாகச் செயல்பட்டு இந்த உலகிற்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும் என கூறி உள்ளார்.
Related Tags :
Next Story