ஆய்வுக்கூடங்களுக்கு கொரோனா பரிசோதனை கருவிகள் தாமதம் இன்றி கிடைக்க நடவடிக்கை - மத்திய சுகாதார மந்திரி ஆலோசனை
ஆய்வுக்கூடங்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை கருவிகள் தாமதம் இன்றி கிடைப்பது தொடர்பாக மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷவர்தன் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா பாதிப்புக்கு உள்ளான பகுதிகளுக்கு சென்று வந்தவர்கள் மற்றும் அந்த நோய்க்கிருமியின் பாதிப்பு அறிகுறி தெரிபவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்படுகின்றன. அரசுக்கு சொந்தமான ஆய்வுக்கூடங்களிலும், அனுமதிக்கப்பட்ட தனியார் ஆய்வுக்கூடங்களிலும் இந்த சோதனை நடத்தப்படுகிறது.
கொரோனா அறிகுறி காணப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பரிசோதனை கருவிகளின் தேவை அதிகரித்து உள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார துறை மந்திரி ஹர்ஷ வர்தன் நேற்று டெல்லியில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், விஞ்ஞான-உயிரி தொழில்நுட்பம் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, ஒரு நாளைக்கு 13 ஆயிரம் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்யும் திறன் கொண்ட அரசுக்கு சொந்தமான 129 ஆய்வுக்கூடங்கள் செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தனியாருக்கு சொந்தமான 1,334 ஆய்வுக்கூடங்கள் மூலம் 38 ஆயிரத்து 442 ரத்த மாதிரிகள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.
அவர்கள் கூறிய கருத்துகளை கேட்டு அறிந்த மந்திரி ஹர்ஷ வர்தன், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள ஆய்வுக் கூடங்களுக்கும் கொரோனா வைரசை கண்டு அறியும் பரிசோதனை கருவிகள், சுவாச கருவிகளுடன் முக கவசங்கள் உள்ளிட்ட நோய் தடுப்பு சாதனங்கள் தாமதம் இன்றி உடனடியாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தரமான சாதனங்களை வாங்க வேண்டும் என்றும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
மேற்கண்ட தகவலை மத்திய அரசு அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாநில சுகாதார மந்திரிகளுடன் ஹர்ஷவர்தன் ஆலோசனை நடத்தியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Related Tags :
Next Story