தனிமை வார்டுகளில் கொரோனா நோயாளிகளுக்கு மருந்து, உணவு கொடுக்க ரோபோக்கள் - கவுகாத்தி ஐ.ஐ.டி. உருவாக்கி வருகிறது


தனிமை வார்டுகளில் கொரோனா நோயாளிகளுக்கு மருந்து, உணவு கொடுக்க ரோபோக்கள் - கவுகாத்தி ஐ.ஐ.டி. உருவாக்கி வருகிறது
x
தினத்தந்தி 2 April 2020 4:31 AM IST (Updated: 2 April 2020 4:31 AM IST)
t-max-icont-min-icon

தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் கொரோனா நோயாளிகளுக்கு மருந்து, உணவு கொடுப்பதற்கும், கழிவுகளை அகற்றுவதற்கும் 2 ரோபோக்களை உருவாக்கும் பணியில் கவுகாத்தி ஐ.ஐ.டி. ஈடுபட்டுள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1,500-ஐ நெருங்கி வருகிறது. அவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு மருந்து, உணவு கொடுக்க மருத்துவ பணியாளர்கள் உள்ளே செல்ல வேண்டி இருப்பதால், அவர்களுக்கும் நோய் பரவும் அபாயம் எழுந்துள்ளது.

இதை கருத்திற்கொண்டு, அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஐ.ஐ.டி. (இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம்) 2 ரோபோக்களை வடிவமைத்து வருகிறது.

அந்த ஐ.ஐ.டி.யின் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறை, எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் துறை ஆகியவற்றை சேர்ந்த குழுவினர், இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு ரோபோ, தனிமை வார்டுகளில் உணவு, மருந்து ஆகியவற்றை கொடுக்க உதவும். இதை ஆஸ்பத்திரியின் தேவைக்கேற்ப பழக்கப்படுத்திக் கொள்ள முடியும். மற்றொரு ரோபோ, தனிமை வார்டுகளில் மருந்து மற்றும் இதர கழிவுகளை அகற்ற உதவும்.

இதுகுறித்து அந்த ஆராய்ச்சி குழுவைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் கூறியதாவது:-

இந்த ரோபோக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டால், தனிமை வார்டுகளில் மருத்துவ பணியாளர்கள் நுழைய வேண்டிய அவசியம் குறையும். 2 ரோபோக்களும் இன்னும் 2 வாரத்தில் தயாராகி விடும்.

அதன்பிறகு, ஐ.ஐ.டி. ஆஸ்பத்திரியிலும், நானோ தொழில்நுட்ப மையத்திலும் சோதனை ஓட்டம் நடைபெறும். இந்த பணிக்கு பிறகு, ரோபோக்களை கொண்டு நோய் பரிசோதனை நடத்தும் திட்டமும் செயல்படுத்தப்படும்.

தற்போது, கவுகாத்தியில், கொரோனா நோய்க்கான அதிநவீன ஆராய்ச்சி மையம் மற்றும் பரிசோதனை கூடம் நிறுவும் பணி நடந்து வருகிறது. இந்த கூடம், ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களுக்கும் பரிசோதனை கூடமாக செயல்படும்.

மேலும், எதிர்காலத்தில் கொரோனா மட்டுமின்றி, எல்லாவகையான தொற்றுகளையும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுக்கவல்ல மனிதசக்தியை உருவாக்க இந்த மையம் பயன்படும்.

கவுகாத்தி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சமீபத்தில் 2 அதிநவீன எந்திரங்களை அளித்துள்ளோம். அவற்றை 12 மணி நேரம் தொடர்ந்து இயக்கினால், ஆயிரம் ரத்த மாதிரிகளை பரிசோதிக்க முடியும். 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கினால், 2 ஆயிரம் மாதிரிகளை பரிசோதிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story