ஊரடங்கு அமலால் பெட்ரோல், டீசல் விற்பனை கடும் வீழ்ச்சி


ஊரடங்கு அமலால் பெட்ரோல், டீசல் விற்பனை கடும் வீழ்ச்சி
x
தினத்தந்தி 2 April 2020 12:26 PM IST (Updated: 2 April 2020 12:26 PM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் பெட்ரோல், டீசல் விற்பனை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகக் கடந்த மாதம் 24 ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதன்படி, வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லை. இதன் காரணமாக  சமூக இடைவெளியைப் பின்பற்றினால் வைரசைக் கட்டுப்படுத்த முடியும் என்பதால், உலக நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. 

இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ளதால், அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனாவசியமாக வெளியில் சுற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வெளியில் சுற்றுபவர்களை போலீசார் எச்சரித்து அனுப்புவதால், வாகனப் போக்குவரத்து கணிசமாகக் குறைந்துள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு செல்லும் வாகனங்கள் மட்டுமே  சாலைகளில் பெரும்பாலும் செல்கின்றன. 

இந்த நிலையில்,  ஊரடங்கு உத்தரவால் நாட்டில் பெட்ரோல், டீசல் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தோடு ஒப்பிடும் போது, நிகழாண்டு மார்ச் மாதத்தில் பெட்ரோல் விற்பனை 17 சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல், டீசல் விற்பனையும் 26 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

அதாவது நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில் பெட்ரோல் விற்பனை 1.94 மில்லியன் டன்களாகவும், டீசல் விற்பனை 4.98 டன்களாகவும் குறைந்து இருப்பதாக  எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன.  சர்வதேச விமான போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளதால்,  விமான எரிபொருள் விற்பனையும் 33 சதவிதம் குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

Next Story