ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு


ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
x
தினத்தந்தி 3 April 2020 5:30 AM IST (Updated: 3 April 2020 5:00 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி, 

மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதுபற்றிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்ட போதே, ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் பேரழிவு மேலாண்மை சட்டத்தின் 51 மற்றும் 60-வது பிரிவுகளின் கீழும், இந்திய தண்டனை சட்டம் 188-வது பிரிவின் படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே ஊரடங்கு நடவடிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மேற்கண்ட சட்ட பிரிவுகளை மீறுபவர்கள் மீது சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள் அந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

இந்த சட்ட பிரிவுகளை மீறும் வகையில் செயல்படுவோருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும். மேலும் தவறான தகவல்களை பரப்புவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க முடியும். அத்துடன் பேரழிவு போன்ற இத்தகைய சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பணம் மற்றும் பொருட்களை கையாடல் செய்வோருக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க முடியும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

Next Story