ஏப்ரல் 14 ந்தேதிக்கு பிறகு: ஊரடங்கு உத்தரவு படிப்படியாகவே தளர்த்தப்படும் வாய்ப்பு
ஏப்ரல் 14 ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு உடனடியாக தளர்த்த்ப்படாது. படிப்படியாகவே தளர்த்தப்படும்.
புதுடெல்லி
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2500 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 56 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவைப் பொருத்தவரை தமிழகத்தில் தொடக்கத்தில் நிலைமை ஓரளவு கட்டுக்குள்தான் இருந்தது என்றே கூறலாம்.
அரசாங்கத்தின் கூற்றுப்படி, மார்ச் 14 ஆம் தேதி நடந்த டெல்லி நிஜாமுதீன் கூட்டம் காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற ஜமாத் மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களால் தமிழகத்தில் தற்போது முற்றிலும் புதியதொரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவர்கள் தமிழகம் முழுவதும் பரவலாக இருக்கின்றனர். மேலும், பல நாள்களாக மற்றவர்களுடன் பழகியும் இருக்கின்றனர்.
எனினும், இவர்களையும் இவர்கள் சம்பந்தப்பட்டவர்களையும் தேடிப் பிடித்து சிகிச்சையளிக்கும் நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொண்டிருக்கிறது. இவ்வளவுதான் மாநாட்டில் சம்பந்தப்பட்டவர்கள், தொற்று பாதிக்கப்பட்டிருக்கக் கூடியவர்கள் என்ற முடிவுக்கு வர முடிந்தால் மாநிலத்தில் நிலைமை மேம்படும்.
புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிக்கும் இந்த வேகத்தில், 21 நாள் ஊரடங்கின் முடிவில் நோயாளிகளின் எண்ணிக்கை 10,000 ஐத் தாண்டக்கூடும் என்று இந்துஸ்தான் டைம்ஸின் வணிக வெளியீடு மின்ட் தெரிவித்துள்ளது.
இதனால் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு அனேகமாகப் படிப்படியாகத்தான் விலக்கிக் கொள்ளப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வைரஸின் அடைகாக்கும் காலம் 14 நாட்கள். எனவே, நாம் பார்ப்பது பழைய பாதிப்புகளாகும் (மார்ச் 24 க்கு முன்). எனவே இந்த பழைய பாதிப்புகள் சரி செய்யப்பட்டவுடன் மட்டுமே தற்போது உள்ள ஊரடங்கின் தாக்கத்தை தீர்மானிக்க முடியும்.
கொரோனோ நிலைமை தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக வியாழக்கிழமை ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி இவ்விஷயத்தைக் கோடிட்டுக் காட்டியுள்ளது குறிப்பிடத் தக்கது.
கொரோனா மேலும் பரவாமல் இருப்பதைத் தடுக்கவும் ஊரடங்கு நிலையிலிருந்து எவ்வாறு கவனமாக வெளிவரலாம் என்பது பற்றியும் ஆலோசனைகளை எதிர்பார்ப்பதாகவும் மோடி குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட வாய்ப்பு இல்லை என்றும் படிப்படியாகவே ஊரடங்கு விலக்கி கொள்ளப்படும். இனிப் பரவ வாய்ப்பில்லை என்று உறுதியாகக் கருதப்படும் மாநிலங்களில் தொடங்கி ஒவ்வொருபகுதியாக விலக்கிக் கொள்ளப்படலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும், ஒரு மாநிலத்திலேயேகூட குறிப்பிட்ட மாவட்டங்களுக்கேற்ப, அல்லது குறிப்பிட்ட பகுதிகளுக்கேற்ப கட்டுப்பாடுகள் தொடரக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
இன்னும் சில குறிப்பிட்ட பகுதிகளில் ஊரடங்கு காலத்தைப் போலவே கட்டுப்பாடுகள் தொடர வாய்ப்புள்ளது.
தவிர, மீண்டும் ரெயில்கள் இயக்கப்பட்டாலும் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும்.
தமிழகத்தில் ஆங்காங்கே சிக்கிக் கொண்டவர்களும் அத்தியாவசியப் பணிகளில் இருப்பவர்களும் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்றடையும் வகையில் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும், நாடு முழுவதும் மக்கள் வெளியே நடமாடவும் கூட்டமாகத் திரளவும் பொது நிகழ்ச்சிகளுக்கும் விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்றும் தெரிகிறது. சிறிய கடைகள் திறக்கப்பட்டாலும் திரையரங்குகள், மால்கள் போன்ற அதிகம் மக்கள் திரளும் பகுதிகளுக்கான தடைகளும் தொடரும்.
எனினும், இவை எல்லாமே, யாராலும் அனுமானிக்க முடியாத, வரும் வாரங்களில் க்ரோனா வைரஸ் தொற்றால் அடுத்தடுத்து நேரிடக் கூடிய விளைவுகளைப் பொருத்தே நடைமுறைக்கு வரும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Next Story