நாளை இரவு தீபம் ஏற்றும் முன் சேனிட்டைசர்களுக்கு பதில் ‘சோப்’ பயன்படுத்தவும்; இந்திய ராணுவம் எச்சரிக்கை


நாளை இரவு தீபம் ஏற்றும் முன் சேனிட்டைசர்களுக்கு பதில் ‘சோப்’ பயன்படுத்தவும்; இந்திய ராணுவம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 April 2020 2:54 PM IST (Updated: 4 April 2020 2:54 PM IST)
t-max-icont-min-icon

நாளை இரவு விளக்கு அல்லது மெழுகுவர்த்தி தீபம் ஏற்றும் முன் சேனிட்டைசர்களுக்கு பதில் ‘சோப்’ பயன்படுத்துங்கள் என இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றும்பொழுது, வருகிற 5ந்தேதி (நாளை) இரவு 9 மணிக்கு உங்கள் இல்லங்களில் எரியும் அனைத்து விளக்குகளையும் அணைத்து விடுங்கள். உங்கள் வீட்டின் வாசற்படியில் இருந்தோ அல்லது பால்கனியில் இருந்தோ, ஒளியேற்றப்பட்ட மெழுகுவர்த்தி, அகல் விளக்கு, டார்ச் லைட் அல்லது உங்கள் மொபைல் போனின் டார்ச் ஒளியை ஏந்தி 9 நிமிடங்கள் நில்லுங்கள் என கூறினார்.

இதுபற்றி இந்திய ராணுவம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதில், ஏப்ரல் 5ந்தேதி (ஞாயிறு) இரவு விளக்கு அல்லது மெழுகுவர்த்தி தீபம் ஏற்றும் முன்பு பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும்.  ஆல்கஹால் கலந்த சேனிட்டைசர்களை கொண்டு கைகளை தூய்மைப்படுத்துவதற்கு பதில் ‘சோப்புகளை’ கொண்டு கைகழுவுங்கள் என அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து தப்ப மக்கள், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  கைகளை தூய்மைப்படுத்த உதவும் ஹேண்ட் சேனிட்டைசர்களில் ஆல்கஹால் சதவீதம் அதிகம் இருக்கும்.  60 சதவீதத்திற்கு மேல் ஆல்கஹால் சேர்க்கப்படும்பொழுது, வைரஸ் பாதிப்பு தவிர்க்கப்படுகிறது.  எனினும், இதனை பயன்படுத்தும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கடந்த வாரத்தில், அரியானாவின் ரேவரி நகரை சேர்ந்த 44 வயது நபர் ஒருவர் சேனிட்டைசரை தனது ஆடையில் தெளித்துள்ளார்.  அவர் அதனை பயன்படுத்தும்பொழுது, அருகே கேஸ் சிலிண்டர் இருந்து உள்ளது.  திடீரென அவர் மீது தீப்பற்றி கொண்டதில் அந்நபருக்கு 35 சதவீத தீக்காயம் ஏற்பட்டு உள்ளது.  தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவர் நலமுடன் உள்ளார்.

ஆல்கஹால் அளவு அதிகரிக்கும்பொழுது, எளிதில் தீப்பற்ற கூடிய ஆபத்து உள்ளது.   அதனால், பொதுமக்கள் விளக்கு அல்லது மெழுகுவர்த்தி தீபம் ஏற்றும் முன் கைகளை தூய்மைப்படுத்த சேனிட்டைசர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக ‘சோப்புகளை’ கொண்டு கை கழுவுங்கள் என அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

Next Story