டாக்டருக்கு கொரோனா தாக்கியதின் எதிரொலி: மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைவர் தனிமைப்படுத்தி கொண்டார்


டாக்டருக்கு கொரோனா தாக்கியதின் எதிரொலி: மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைவர் தனிமைப்படுத்தி கொண்டார்
x
தினத்தந்தி 5 April 2020 11:05 PM GMT (Updated: 5 April 2020 11:05 PM GMT)

மத்திய ரிசர்வ் படை டாக்டருக்கு கொரோனா வைரஸ் பாதித்து உள்ளதால், அந்த படையின் தலைவர் மகேஷ்வரி தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டில் இருந்து பணியாற்றுகிறார்.

புதுடெல்லி, 

நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவமான, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைவராக இருப்பவர், ஏ.பி.மகேஷ்வரி (வயது 59).

இந்தப் படையில் 3.25 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு தலைமை பொறுப்பேற்றுள்ள மகேஷ்வரி, 1984-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநில ஐ.பி.எஸ். அணியை சேர்ந்தவர் ஆவார்.

இவர், தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு ஆலோசகராக உள்ள கே.விஜய்குமாருடன் (தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் அணியில் தேர்வாகி பணியாற்றியவர்) சத்தீஷ்கார் மாநிலத்துக்கு கடந்த வாரம் எல்லை பாதுகாப்பு படையின் தனி விமானத்தில் சென்று, அங்கு நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை பார்வையிட்டு வந்தார்.

இந்தநிலையில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் தலைமை டாக்டருக்கு கொரோனா வைரஸ் பாதித்தது. அவர் அரியானா மாநிலம், ஜாஜாரில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரோடு தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள்.

அந்த டாக்டருடன் தொடர்பில் இருந்த மற்றொரு அதிகாரியுடன் மகேஷ்வரி தொடர்பில் இருந்து இருக்கிறார். இது கொரோனா தாக்கியவருடனான நேரடி தொடர்பு இல்லை. மறைமுக தொடர்புதான்.

இருந்தாலும் இதன் மூலம் தனக்கு கொரோனா பாதித்து, அது தொடர்ந்து மற்றவர்களுக்கு பரவாமல் தடுப்பதற்காக மகேஷ்வரி தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

இது குறித்து நேற்று அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நான் என் இயக்கத்தை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டுள்ளேன். கொரோனா வைரஸ் மற்றவர்களுக்கு பரவி விடக்கூடாது என்ற பொறுப்புணர்வு தான் இதற்கு காரணம். சம்மந்தப்பட்ட (தனிமைப்படுத்தப்பட்டுள்ள) அதிகாரிகளின் உடல்நிலை குறித்த தெளிவு வரும் வரையில் நான் வீட்டில் இருந்து கொண்டு பணியாற்றுவேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதையொட்டி மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் செய்தி தொடர்பாளர் டி.ஐ.ஜி. மோசஸ் தினகரன் கூறும்போது, “கொரோனா வைரஸ் பாதித்த அதிகாரியுடன் மத்திய ரிசர்வ் படையின் தலைவர் மறைமுக தொடர்பு கொண்டுள்ளார். எனவே அலுவலக விதி முறைப்படி அவர் தன்னை தனிமைப்படுத்தி உள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்து நிறுத்துகிற வகையில் தொடர்புடைய அதிகாரிகள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு படைத்தலைவர் அறிவுறுத்தி உள்ளார்” என கூறினார்.

மேலும், சிகிச்சை பெற்று வருகிற தலைமை டாக்டரை தவிர்த்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு தற்போது வரை இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Next Story