கொரோனா தடுப்புக்காக நிதி திரட்ட மத்திய அரசு நடவடிக்கை: எம்.பி.க்கள் சம்பளம் குறைப்பு, தொகுதி மேம்பாட்டு நிதியும் ரத்து
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டும் வகையில் எம்.பி.க்களின் சம்பளம் 30 சதவீதம் குறைக்கப்படுவதோடு, தொகுதி மேம்பாட்டு நிதியும் ரத்து செய்யப்படுகிறது. இதற்கான முடிவு மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
புதுடெல்லி,
கொரோனா பரவுவதை தடுப்பதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்குவது, சுகாதார நடவடிக்கைகள் போன்றவற்றுக் காக அதிக நிதி செலவிடப்படுகிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் காணொலி காட்சி மூலம் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. மந்திரிசபை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடந்தது இதுவே முதல் தடவை ஆகும்.
இந்த கூட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும், அரசின் செலவினங்களுக்காக கூடுதல் நிதி திரட்டும் வகையிலும் எம்.பி.க்களின் சம்பளத்தில் 30 சதவீதத்தை குறைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த தகவலை கூட்டம் முடிந்ததும் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பின் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளை தொடர்ந்து, ஓராண்டு காலத்துக்கு பிரதமர், மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள் ஆகியோரின் சம்பளத்தில் 30 சதவீதத்தை குறைப்பது என்று மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இதற்காக 1954-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில் அவசர சட்டம் ஒன்றை கொண்டு வர மந்திரிசபை ஒப்புதல் அளித்து இருக்கிறது. எம்.பி.க்களுக்கான சம்பளத்தில் 30 சதவீதத்தை குறைக்க இந்த சட்ட திருத்தம் வகை செய்யும். இந்த 30 சதவீத சம்பள குறைப்பு இந்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இந்த சம்பள குறைப்பு ஓராண்டு அமலில் இருக்கும்.
இதேபோல் தங்களுக்கு உள்ள சமுதாய பொறுப் புணர்வை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் மாநில, யூனியன் பிரதேசங்களின் கவர்னர்கள் தாமாக முன்வந்து தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள முன்வந்து இருக்கிறார்கள். எனவே அவர்களுடைய சம்பளத்திலும் 30 சதவீதத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
தொகுதி மேம்பாட்டு நிதியாக தற்போது ஒவ்வொரு எம்.பி.க்கும் ஆண்டுக்கு தலா ரூ.5 கோடி வழங்கப்படுகிறது. இந்த நிதி நிறுத்தி வைக்கப்படுகிறது. அதாவது 2020-2021 மற்றும் 2021-2022-ம் நிதி ஆண்டுகளில் (2 ஆண்டுகள்) எம்.பி.க்களுக்கு இந்த நிதி வழங்கப்படமாட்டாது.
இந்த சம்பள குறைப்பு, எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து மூலம் கிடைக்கும் தொகை மத்திய அரசின் நிதி தொகுப்புக்கு செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.
எம்.பி.க்களின் மாத சம்பளம் ரூ.1 லட்சம் ஆகும். இது தவிர தொகுதி படியாக மாதம் ரூ.70 ஆயிரமும், மற்றும் பிற படிகளும் வழங்கப்படுகின்றன.
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் 543 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 245 பேர் என இரு சபைகளிலும் மொத்தம் 788 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தப்படுவதன் மூலம் கிடைக்கும் சுமார் ரூ.7,880 கோடி அரசின் செலவினங்களுக்கு பயன்படுத்தப்படும்.
முன்னதாக மந்திரி சபை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து விளக்கியதோடு, அந்த பாதிப்புகளை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறைகள் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
கொரோனா பாதிப்பு சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் அதிக தொடர்பு இல்லாத துறைகள் தங்கள் பணிகளை படிப்படியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், விவசாயிகளின் வேளாண் பொருட்கள் சந்தைகளை சென்று அடைவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கொரோனா ஒழிப்பு நடவடிக்கையின் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கவேண்டும் என்றும் மந்திரிகளை மோடி கேட்டுக் கொண்டார்.
கொரோனா பாதிப்பு நடவடிக்கைகளுக்காக எம்.பி.க் களின் சம்பளத்தை குறைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை உள்துறை மந்திரி அமித்ஷா வரவேற்று இருக்கிறார். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் கவர்னர்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக்கொள்ள முன்வந்து இருப்பதற்கும் அவர் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story