அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்க இந்தியா முடிவு


அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்க இந்தியா முடிவு
x
தினத்தந்தி 7 April 2020 5:13 AM GMT (Updated: 7 April 2020 5:13 AM GMT)

அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா பாதிப்பு சிகிச்சைகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை வழங்குவது நல்ல பலனளிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார். மலேரியா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா அதிக அளவில் வாங்கி வருகிறது. 

இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஹைட்ராக்ஸிகுளோராகுயின் உள்பட மருத்துவ பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்தது. இதனால், அமெரிக்கா ஹைட்ராக்ஸிகுளோராகுயின் மருந்துகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய டிரம்ப், அமெரிக்கா ஏற்கனவே ஆர்டர் செய்த ஹைட்ராகிஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

இந்த நிலையில், இது தொடர்பாக மீண்டும் கருத்துக் கூறிய டிரம்ப், நாங்கள் ஏற்கனவே ஆர்டர் செய்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பும் என்று நம்புகிறேன். அவ்வாறு செய்யவில்லை என்றால் தக்க பதிலடி கொடுப்போம்’ என்று மறைமுக மிரட்டல் விடுத்து இருந்தார். 

இதன் தொடர்ச்சியாக,  இந்தியாவைச் சார்ந்துள்ள அண்டை நாடுகள் மற்றும், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 


Next Story