எம்.பி.க்களின் 30% ஊதிய பிடித்தம்; மத்திய அமைச்சரவை முடிவுக்கு சோனியா காந்தி ஆதரவு


எம்.பி.க்களின் 30% ஊதிய பிடித்தம்; மத்திய அமைச்சரவை முடிவுக்கு சோனியா காந்தி ஆதரவு
x
தினத்தந்தி 7 April 2020 2:56 PM IST (Updated: 7 April 2020 2:56 PM IST)
t-max-icont-min-icon

எம்.பி.க்களின் 30% ஊதிய பிடித்தம் என்ற மத்திய அமைச்சரவை முடிவுக்கு சோனியா காந்தி ஆதரவு அளித்து உள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் காணொலி காட்சி வழியே நேற்று நடந்தது.  இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

கூட்ட முடிவில், கொரோனா சவாலை எதிர்கொள்ள, பிரதமர் உள்பட எம்.பி.க்களின் ஊதியத்தில் 30% பிடித்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.  இதேபோன்று குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர் மற்றும் ஆளுநர்களின் ஊதியத்திலும் 30% பிடித்தம் செய்யப்படும்.

ஓய்வூதியம் பெறும் முன்னாள் எம்.பி.க்களின் ஊதியத்தில் இருந்தும் 30% பிடித்தம் செய்யப்படும்.  ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் நடைமுறை ஓராண்டுக்கு அமலில் இருக்கும்.  எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி அடுத்த 2 ஆண்டுகளுக்கு நிறுத்தப்படுகிறது.  இதனால் எம்.பி.க்களின் தலா 10 கோடி ரூபாய் நிதி, அரசு நிதியில் சேர்க்கப்படும்.

ஊதிய குறைப்பால் சேமிக்கப்படும் நிதி கொரோனா நிவாரண நிதியில் சேர்க்கப்படும்.  இந்த அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது.  இதனால் அரசுக்கு ரூ.7,900 கோடி மிச்சப்படும்.  இந்த நடைமுறை ஏப்ரல் 1ந்தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி இடைக்கால தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ள அலுவல்பூர்வ கடிதத்தில், கொரோனா பாதிப்பின் சவாலை எதிர்கொள்வதற்கு ஏதேனும் ஆலோசனைகள் இருக்குமெனில் அவற்றை வழங்கும்படி எங்களிடம் வேண்டுகோள் விடுத்து இருந்தீர்கள்.

அந்த நல்லெண்ணத்தில் இந்த கடிதத்தினை எழுதுகிறேன்.  நீங்கள் பாதுகாப்புடன் மற்றும் நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.

எம்.பி.க்களின் ஊதியத்தில் 30% பிடித்தம் செய்வது என்று மத்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவுக்கு எங்களுடைய ஆதரவு உண்டு என தெரிவித்து கொள்கிறேன்.

கொரோனாவுக்கு எதிரான போரில் தேவையான அதிக அளவு நிதியை இதுபோன்று பயன்படுத்தி கொள்ளும் நல்ல நடவடிக்கைகள் இந்நேரத்தில் மிக அவசியம் என தெரிவித்து உள்ளார்.

Next Story