அறிகுறியே இல்லை, ஆனால் வைரஸ் பாதிப்பு... டாக்டர்களை குழப்பும் கொரோனா


அறிகுறியே இல்லை, ஆனால் வைரஸ் பாதிப்பு... டாக்டர்களை  குழப்பும் கொரோனா
x
தினத்தந்தி 7 April 2020 11:56 AM GMT (Updated: 7 April 2020 11:56 AM GMT)

அறிகுறியே இல்லாமல் கொரோனா நோய் திடீர் என தோன்றி டாக்டர்களை கொரோனா வைரஸ் குழப்பி வருகிறது.

புதுடெல்லி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த மருத்துவர்கள் முயன்று வருகிறார்கள். அந்த வைரஸை அழிக்க மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் கொரோனா வைரஸ் மனித உடலில் என்ன வகையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதையே இன்னமும் புரிந்து கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்கள் மருத்துவர்கள். 

தமிழகத்தில் 571பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 415பேருக்கு அறிகுறிகளே இல்லாமல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உலகம் முழுவதும், பரவி வருகிறது. இதன் அறிகுறிகள் குறித்து பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன. பொதுவாக இந்த வைரஸ் தாக்கியிருந்தால், மூன்று வித்தில் கண்டறிய முடியும். அதாவது, முதல் அறிகுறி இருமல், வறட்டு இருமல், காய்ச்சல், உடல் சூடு அதிகரித்தல் போன்றவையாகும்.ஆனால், தற்போது பல நாடுகளில் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லாமல் பரவி வருகிறது. அதாவது ஏ என்ற நபருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று இருந்தால் அவர் பல இடங்களுக்கு பயணிப்பார். இவ்வாறு அவரிடம் இருந்து பலருக்கு எளிதில் பரவிவிடும்.

தமிழகத்திலும் கூட இப்படி நடக்கிறது. உதாரணமாக தமிழகத்தில் சில நோயாளிக்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை. அவர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா சோதனையிலும் எதிர்மறை முடிவுகளே வந்தது. ஆனால் 21 நாட்கள் கழித்து திடீர் என்று அறிகுறி ஏற்படுகிறது. பின் சோதனை செய்தால் பாசிட்டிவ் என்று வருகிறது. 

கேரளாவின் பத்தனம் திட்டா பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் டெல்லியில் படித்து வந்துள்ளார்.கரோனா ஊரடங்குக்கு முன்பு தனது சொந்த ஊருக்குத் திரும்பிய அந்த மாணவி, பாதுகாப்பு நடவடிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டார்.மார்ச் 17 ஆம் தேதியன்று கேரளா வந்த அந்த மாணவிக்கு 19 நாட்கள் கண்காணிப்பிற்குப் பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 19 நாட்களாகத் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவருக்கு எவ்வித கரோனா அறிகுறிகளும் தென்படாத சூழலில்,அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.ஆனால் அந்த சோதனையில் அவருக்கு கரோனா இருப்பதாக முடிவுகள் வந்துள்ளன.பொதுவாக வைரஸ் பாதிக்கப்பட்ட 14 நாட்களில் அறிகுறிகள் தென்படத் துவங்கும் என்பதைக் கொண்டே மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.ஆனால் 19 நாட்களாக எந்த அறிகுறியும் தென்படாத அந்த மாணவிக்கு கரோனா தொற்று இருப்பது மருத்துவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அதேபோல் சீனாவில் தற்போது மீண்டும் கொரோனா கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட தொடங்கி உள்ளது. சீனாவில் தற்போது கொரோனா ஏற்படும் நபர்களில் பலருக்கு அறிகுறியே இல்லை. அதேபோல் இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் கொரோனா அறிகுறியே இல்லாமல் பலருக்கு கொரோனா ஏற்படுகிறது. அமெரிக்காவில் 30% பேருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா ஏற்படுவதாக கூறுகிறார்கள். ஐஸ்லாந்தில் 50% பேர் கொரோனா அறிகுறியே இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை மருத்துவ உலகம் கொரோனா வைரஸ் பற்றி அறிந்து வைத்துள்ள முக்கிய விஷயம், அது நுரையீரலை அதிகம் பாதிக்கிறது. அதனால், வறட்டு இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படலாம். பாதிப்பு தீவிரமடைந்தால், நோயாளிகள் சுவாசிக்க சிரமப்படுகிறார்கள். அவர்களுக்கு அப்போது செயற்கை ஆக்சிஜன் உதவி நிச்சயம் தேவை. இந்த அடிப்படையில் தான் இதுவரை கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ஆனால், தற்போது சீனா, இத்தாலி, வாஷிங்க்டன், நியூயார்க் போன்ற பகுதிகளில் இருந்து அதிக ஆய்வு அறிக்கைகள் வெளியாகி வருகிறது. அதன்படி நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வில், ஐந்தில் ஒரு கொரோனா வைரஸ் நோயாளிக்கு இதய பாதிப்பு ஏற்படுகிறது. அது இதய செயலிழப்புக்கு காரணமாக அமைகிறது. நுரையீரல் பாதிப்பே இல்லாதவர்கள் கூட பலியாகிறார்கள். 

சீனாவில் மார்ச் மாதம் இரண்டு ஆய்வு அறிக்கைகள் வெளியாகின. அந்த ஆய்வுகள் 416 நோயாளிகளிடம் செய்யப்பட்டது. அதில் 19 சதவீதம் பேர் இதய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். மேலும், அந்த ஆய்வின் படி இதய பாதிப்புக்கு உள்ளாகும் நோயாளிகளில் 51 சதவீதம் பேர் இறக்கிறார்கள். அதே சமயம், இதய பாதிப்புக்கு உள்ளாகாத நோயாளிகளில் 4.5 சதவீதம் மட்டுமே இறந்துள்ளனர். 

Next Story